திருவண்ணாமலையில் 12-வது நிலையமாக ஹலோ எப்.எம். ஒளிபரப்பு இன்று தொடங்கியது. தினத்தந்தி குழும தலைவர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் ஒலிபரப்பை தொடங்கி வைத்தார்.
தினத்தந்தி குழுமத்தின் வானொலியான ஹலோ எப்.எம். தமிழகத்தின் முக்கிய நகரங்களில் தனது சிறப்பு வாய்ந்த நிகழ்ச்சிகள் மூலம் மக்களின் மனதை கவர்ந்து உள்ளது.
11 நகரங்களில் இருந்து ஒலிபரப்பாகிய ஹலோ எப்.எம். தனது 12-வது சேவையை மலையே ஜோதியாக உயர்ந்து நிற்கும் திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று தொடங்கியது. இதன் தொடக்க விழா திருவண்ணாமலையில் நடந்தது. தினத்தந்தி குழும தலைவர் சி. பாலசுப்பிரமணியன் ஆதித்தன் ஒலிபரப்பை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் தினத்தந்தி குழும இயக்குனர் பா.ஆதவன் ஆதித்தன் கலந்து கொண்டார். மேலும், ஹலோ எப்.எம். துணை தலைமை செயல் அதிகாரி சுரேஷ், தேசிய விற்பனை பிரிவு தலைமை அதிகாரி ரவிச்சந்திரன், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு தலைமை அலுவலர் குமுதா, மற்றும் ஊழியர்கள் உட்பட பலர் விழாவில் பங்கேற்றனர்.
முதன் முதலில் சென்னையில் சென்னையில் முதன்முதலாக 2006-ம் ஆண்டு தனது ஒலிபரப்பு சேவையை தொடங்கிய ஹலோ எப்.எம். அதற்கு அடுத்தபடியாக 2007-ம் ஆண்டு கோவை, மதுரை, திருச்சி, நெல்லை, தூத்துக்குடி மற்றும் புதுச்சேரி ஆகிய 6 நகரங்களில் தொடங்கியது.
மனதை மயக்கும் அனைத்து காலகட்ட பாடல்கள், காலத்திற்கு தகுந்தாற்போல் அனைத்து வயதினரையும் கவரும் வகையிலான நிகழ்ச்சிகள் ஆகியவற்றின் மூலம் எல்லா வயது நேயர்களின் பாராட்டையும் பெற்று தமிழ்நாட்டின் அதிகாரப்பூர்வ முதன்மை வானொலி என்கிற கவுரவத்தையும், தகவல் மற்றும் பொழுது போக்கு அம்சங்கள் நிறைந்த முழுமையான ஊடகம் என்கிற பெயரையும் ஹலோ எப்.எம். பெற்றுள்ளது.
உலக நிகழ்வுகள், நாட்டு நடப்புகள், உள்ளூர் விஷயங்கள் என அனைத்தையும் நேயர்களோடு நேரலையில் உரையாடுதல், அனைத்து துறை வல்லுனர்களுடன் கருத்துப் பரிமாற்றங்கள், திரை மற்றும் ஏனைய கலைத்துறையினருடன் நேர்முகங்கள், பரபரப்பான அரசியல் பேட்டிகள் என துடிப்பான நிகழ்ச்சிகளை ஹலோ எப்.எம். தனித்துவத்துடன் வழங்கி வருகிறது.
அதுமட்டுமின்றி ‘சொல்லியடி’ போன்ற அட்டகாசமான பரிசுப் போட்டிகள், பெண்கள் மற்றும் மாணவர்களுக்கான விசேஷ நிகழ்ச்சிகள், பொது மக்களுக்கான விழிப்புணர்வு பிரச்சாரம் ஆகியவற்றை நடத்தி நேயர்களின் மனதில் நீங்கா இடத்தை ஹலோ எப்.எம். பெற்றுள்ளது.
அதன் தொடர்ச்சியாக கடந்த 2018-ம் ஆண்டு சேலம், ஈரோடு, வேலூர் ஆகிய நகரங்களில் ஹலோ எப்.எம். தொடங்கப்பட்டது.
அந்த வகையில் 10 நகரங்களில் கடந்த 20 ஆண்டுகளாக மக்களோடு இரண்டற கலந்து 4.6 கோடி மக்களின் வாழ்க்கையில் ஒரு அங்கமாக தினந்தோறும் மகிழ்வித்து வரும் ஹலோ எப்.எம். கடந்த அக்டோபர் மாதம் 2-ந்தேதி 21-வது ஆண்டில் அடி எடுத்து வைத்தது.
வயதில் 21-ஐ எட்டியுள்ள ஹலோ எப்.எம். வளர்ச்சியிலும் 21-ஐ எட்டி உள்ளது. அதாவது கடந்த ஆண்டு இந்தியா முழுவதும் 270 நகரங்களில் பண்பலை ஒளிபரப்பு உரிமங்களுக்கான ஏலம் நடைபெற்றது.
கடுமையான போட்டி நிலவிய இந்த ஏலத்தில் ஹலோ எப்.எம். வானொலி நாகர்கோவில், தஞ்சாவூர், கரூர், புதுக்கோட்டை, காரைக்குடி, நெய்வேலி, ராஜபாளையம், திண்டுக்கல், திருவண்ணாமலை, வாணியம்பாடி மற்றும் குன்னூர் ஆகிய 11 நகரங்களுக்கான உரிமைகளை வென்ற ஒரே வானொலியாக திகழ்கிறது.
இதனால் மொத்தம் 21 நகரங்களில் இருந்து ஒளிபரப்பை மக்களுக்கு கொடுக்க உள்ளதால் உலகில் வேறு எந்த வானொலிக்கும் இல்லாத பெருமையை பெற்று யாரும் நெருங்க முடியாத தமிழகத்தின் ஈடு இணையற்ற முன்னணி பண்பலை என்கிற உயரிய உச்சத்தை தொட்டு உள்ளது.
அந்த வகையில் நாகர்கோவிலுக்கு அடுத்தபடியாக தமிழகத்தின் முக்கியமான ஆன்மீக நகரமான திருவண்ணாமலை நகரில் ஹலோ எப்.எம். தனது ஒலிபரப்பை இன்று முதல் தொடங்கியது.
ஹலோ எப்.எம். நிகழ்ச்சிகளை திருவண்ணாமலை மாவட்ட மக்கள் 92.9 என்ற அலை வரிசையில் 24 மணி நேரமும் கேட்டு மகிழலாம். திருவண்ணாமலை மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த மக்கள் 04175-292929, 9514145929 ஆகிய தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று ஹலோ எப்.எம். நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலையில் ஒலிபரப்பு சேவையை தொடங்கி உள்ள ஹலோ எப்.எம். முதல் நாளான இன்று நேயர்களுக்கு வெள்ளி நாணயங்களை பரிசாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதிகாலை 5 மணி முதல் நிகழ்ச்சி தொகுப்பாளர் கேட்கும் கேள்விகளுக்கு சரியான விடைகளை 04175-292929, 9514145929 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு தெரிவித்த நேயர்களுக்கு வெள்ளி நாணயங்கள் பரிசாக வழங்கப்பட்டன.
திருவண்ணாமலையில் ஹலோ எப்.எம். இன்று அதிகாலையில் நிகழ்ச்சி தொடங்கி நாள் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும்.
அதிகாலை 5 மணி முதல் 7 மணி வரை ‘ஆத்திச்சூடி’, 7 மணி முதல் 8 மணி வரை ‘சில்லுனு ஒரு காலை’, 8 மணி முதல் 10 மணி வரை ‘ஹலோ தமிழா’,10 மணி முதல் 12 மணி வரை ‘கிக் ஸ்டார்ட்’, நண்பகல் 12 மணி முதல் 2 மணி வரை ‘அஞ்சறைப் பெட்டி’, மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரை ‘டூரிங் டாக்கீஸ்’, மாலை 4 மணி முதல் 6 மணி வரை ‘உங்க ளுக்காக’, மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை ‘தாறுமாறு தர்பார்’, இரவு 8 மணி முதல் 9 மணி வரை ‘எட்டு மணி எக்ஸ்பிரஸ்’, இரவு 9 மணி முதல் 11 மணி வரை ‘டைரி’, இரவு 11 மணி முதல் 12 மணி வரை ‘ஹலோ கிராமபோன்’, இரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரை மனம் மயக்கும் பாடல்கள் ஒலிபரப்பாகும்.
தமிழகத்தின் முதல் தர வானொலி என்ற மிகப்பெரிய பெருமையை தக்க வைத்துள்ள ஹலோ எப்.எம். இன்று திருவண்ணாமலை, வாணியம்பாடியை தொடர்ந்து தஞ்சாவூர், கரூர், புதுக்கோட்டை, காரைக்குடி, நெய்வேலி, ராஜபாளையம், திண்டுக்கல், குன்னூர் ஆகிய நகரங்களி லும் விரைவில் தனது ஒலிபரப்பை தொடங்க உள்ளது.
புதிய நகரங்களிலும் ஒலிபரப்பை தொடங்குவதன் மூலம் உலகின் தமிழ் வானொலிகளில் மிகப்பெரிய வலை பின்னல் அமைப்பு கொண்டுள்ள வானொலி என்ற பெருமையை ஹலோ எப்.எம். பெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.