தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் சென்னையில் நேற்று தங்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அப்போது பேசிய விஜய் பெண்களுக்கு அன்பு கோரிக்கை ஒன்றை வைத்தார்.
இதுபற்றி விஜய் பேசுகையில், 'சட்டமன்ற தேர்தல் நெருங்குகிறது. என்னுடைய அம்மா, அக்கா, தங்கைகள் என அனைவரும் உங்கள் வீட்டின் வாசலில் நமது விசில் சின்னத்தை கோலமிடுங்கள். இது நீங்கள் எனக்கு கொடுக்கிற பெரிய ஆதரவாக இருக்கும்' என்று கூறினார். விஜய்யின் கோரிக்கையை ஏற்று அவரது ரசிகைகள் மற்றும் பெண்கள் பலர் உடனடியாக தங்களின் வீட்டு வாசல்களில் விசில் சின்னத்தை கோலமாக வரைந்தனர்.
சென்னையில் உள்ள பல்வேறு இடங்களிலும் விஜய் ரசிகைகள் மற்றும் த.வெ.க. பெண் தொண்டர்கள் இன்று காலையில் தங்கள் வீட்டு வாசலில் விசில் கோலமிட்டனர். த.வெ.க.வுக்கு ஆதரவு கொடுக்கும் வகையில் பெண்கள் விசில் கோலம் வரைந்து அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
சென்னை சூளைமேடு பகுதியில் உள்ள பல வீடுகளில் பெண்கள் மற்றும் சிறுமிகள் தங்கள் வீட்டு முன்பு விசில் கோலம் வரைந்திருந்தனர். விசில் சின்னத்தின் அருகில் டி.வி.கே. என்றும், தமிழக வெற்றிக்கழகம் என்றும் எழுதி இருந்தனர். மேலும் பலர் த.வெ.க.வுக்கு வாக்களியுங்கள் என்றும் எழுதியுள்ளனர். பெண்கள் விசில் கோலமிட்ட புகைப்படத்தை த.வெ.க.வினர் இணையதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.