வாலாஜாபாத் ஒன்றியம் அய்யம்பேட்டை மற்றும் ஏகனாம்பேட்டை அரசு பள்ளியில் ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள்.
இந்த பகுதியில் பள்ளிகளுக்கு மாணவ-மாணவிகள் வந்து செல்லும் காலை மற்றும் மாலை நேரங்களில் எம்சான்ட் ஏற்றி வரும் லாரிகள் மற்றும் கனரக வாகனங்கள் அதிக அளவில் வந்து செல்வதால் விபத்து அபாயம் ஏற்பட்டு உள்ளது.
இதனை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த நிலையில் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் சினேகாவிடம் வாலாஜாபாத் ஒன்றியம் அய்யம்பேட்டையை கிராமத்தை சேர்ந்த பள்ளி மாணவ-மாணவிகள் ஒன்று சேர்ந்து வந்து கோரிக்கை மனு வழங்கினர்.
நாங்கள் அனைவரும் அய்யம்பேட்டை மற்றும் ஏகனாம்பேட்டை அரசு பள்ளியில் படித்து வருகிறோம். பள்ளி நேரங்களில் காஞ்சீபுரம்-செங்கல்பட்டு சாலையில் ஏராளமான கனரக வாகனங்கள், எம்.சாண்ட் ஏற்றி செல்லும் லாரிகள் மற்றும் தனியார் கம்பெனி வாகனங்கள் அதிவேகமாக செல்கின்றன.
இதனால் நாங்கள் பள்ளிக்கு செல்லவும், சாலை கடக்கும் போது விபத்து அச்சமாக உள்ளது என்றும், எனவே பள்ளி நேரங்களில் கனரக வாகனங்கள் இப்பகுதியில் செல்வதை தவிர்த்து, மாணவ-மாணவிகள் எவ்வித பயமும் இன்றி பள்ளி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்து உள்ளனர்.
பள்ளி மாணவ-மாணவிகள் ஒன்று சேர்ந்து கலெக்டரிடம் புகார் மனு அளித்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.