தொடர் விடுமுறை என்பதால் விடுமுறையை கொண்டாட சென்னை தலைநகரில் வசிக்கும் தென்மாவட்டத்தை சேர்ந்தவர்கள் நேற்றுமுன்தினம் மாலை முதல் அரசு பஸ், ஆம்னி பஸ், கார், வேன், மோட்டார் சைக்கிள் என தங்களுக்கு விருப்பமான வாகனங்களில் தென் மாவட்டங்களை நோக்கி புறப்பட்டனர்.
இதனால் நேற்று முன்தினம் இரவு சாலையில் வாகனங்கள் அணிவகுக்க ஆரம்பித்தன. வாகனங்கள் சாலையில் அதிகரிக்க ஆரம்பித்ததால் விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தென்மாவட்டங்களை நோக்கி செல்லும் வாகனங்களுக்கு பொதுவாக 6 வழிகள் இருக்கும். வாகன நெரிசலை குறைக்க கூடுதலாக 3 வழிகள் திறந்து 9 வழியாக வாகனங்கள் தென் மாவட்டங்களை நோக்கி அனுப்பி வைக்கப்பட்டது.
மேலும் விக்கிரவாண்டி, பாப்பனப்பட்டு ஆகிய பகுதிகளில் மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருவதால் அந்த பகுதிகளில் சாலை மிகக் குறுகியதாக உள்ளதால் வாகன போக்குவரத்து மேலும் நெரிசல் ஏற்பட்டு அந்த பகுதியில் 3 கிலோ மீட்டர் தொலைவிற்கு வாகனங்கள் அணிவகுத்து பாம்பு போல ஊர்ந்து சென்றன.
இந்நிலையில் நேற்று பகல் 12 மணி முதல் இரவு 12 மணி வரை 48 ஆயிரத்து 126 வாகனங்கள், நள்ளிரவு 12 மணி முதல் இன்று காலை 10 மணி வரை 18 ஆயிரம் வாகனங்கள் என மொத்தம் 66 ஆயிரத்து 126 வாகனங்கள் தென் மாவட்டங்களை நோக்கி சென்றன. மேலும் தென் மாவட்டங்களை நோக்கி கூடுதலான வாகனங்கள் செல்லும் என சுங்கச்சாவடி அதிகாரிகள் தெரிவித்தனர்.