திருவண்ணாமலை கோவிலில் இன்று சித்ரா பவுர்ணமி விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கிரிவலம் செல்வார்கள்.
பயணிகள் வசதிக்காக சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இன்று காலை முதலே ஏராளமானோர் தங்களது கார் உள்ளிட்ட வாகனங்களில் திருவண்ணாமலை நோக்கி சென்றனர்.
இதேபோல் நாளை (1-ந்தேதி) தொழிலாளர் தினத்தை முன்னிட்டு அரசு விடுமுறை மற்றும் தொடர்ந்து சனி, ஞாயிறு விடுமுறை நாட்கள் வருவதால் ஏராளமானோர் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றனர். இன்று காலை முதல் சொந்த ஊர்களுக்கு சென்றவர்களும் ஏராளமான வாகனங்களில் சென்னையில் இருந்து புறப்பட்டு சென்றனர்.
திருவண்ணாமலை மற்றும் தென்மாவட்டங்களுக்கு செல்லும் வாகனங்கள் ஒரே நேரத்தில் சென்னையில் இருந்து புறப்பட்டு சென்றதால் பெருங்களத்தூர்-வண்டலூர் இடையே இன்று மதியம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் ஊர்ந்தபடி மெதுவாக சென்றன. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்தனர்.