தமிழகத்தில் 22 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கேரள பகுதிகளில் அடுத்த 2 அல்லது 3 தினங்களில் தென்மேற்கு பருவமழை தொடங்கும்.
தெற்கு கேரளம் மற்றும் அதையொட்டிய தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. மேலும், தென்கிழக்கு அரபிக்கடல், அதையொட்டிய லட்சத் தீவு பகுதிகளின் மேல் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.
இதுமட்டுமன்றி, கிழக்கு விதர்பா முதல் தெற்கு கேரளம் பகுதிகள் வரை தெலங்கானா, ராயலசீமா, தெற்கு கர்நாடகா, தமிழ்நாடு, புதுச்சேரி வழியாக வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுவதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இன்று (ஜூன் 2) முதல் 7 வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
குறிப்பாக நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, கரூர், நாமக்கல், ஈரோடு, சேலம், திருச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று (ஜூன் 2) முதல் 7-ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். தொடர்ந்து, நீலகிரி, கோவை, தேனி, திருப்பூர், தென்காசி, திண்டுக்கல், திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் புதன் மற்றும் வியாழக்கிழமை (ஜூன் 3, 4) இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும். மேற்குறிப்பிட்ட மாவட்டங்களுக்கு, இந்த 3 நாள்களும் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.