செங்கல்பட்டு:
தமிழக பகுதியில் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த ஒருவாரமாக மாலை மற்றும் இரவு நேரங்களில் விட்டு விட்டு பலத்த மழை பெய்கிறது.
இதேபோல் செங்கல்பட்டு, திருவள்ளுர், காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் தொடர்ந்து கனமழை கொட்டுகிறது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. ஏரிகளுக்கும் நீர் வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது.
தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சேதமடைந்து உள்ளன.
கடந்த 3 நாட்களாக இரவு நேரத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக வடகால் கிராமத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த சுமார் 60 ஏக்கருக்கு மேல் பயிரிடப்பட்ட நெல் பயிர்கள் மழையில் நனைந்து சேதமடைந்துள்ளது. வயல்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது.இதனால் அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
தொடர்மழை காரணமாக தண்ணீர் வடியாமல் உள்ளதால் பயிர்கள் அனைத்தும் அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர். மேலும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நேரடியாக ஆய்வு செய்து விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.