கோவையில் பல இடங்களில் மரங்களும், மின் கம்பங்களும் முறிந்து விழுந்தன. இதேபோல மணியகாரன்பாளையம், நல்லாம்பாளையம் பகுதிகளிலும் மழை வெளுத்து வாங்கியதால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.
கோவை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
நேற்று மாலையும் மாவட்டத்தின் பல இடங்களில் மழை கொட்டித்தீர்த்தது. பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் மாலை 6 மணிக்கு மழை பெய்யத் தொடங்கியது. இதனால் ரோடுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. 5 முக்கு, விவேகானந்தபும் குட்டை பகுதியில் கட்டப்பட்டிருந்த வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. பட்டாளம்மன் கோவில் வீதியில் குடியிருக்கும் கலா என்பவரது வீட்டுச்சுவர் இடிந்து விழுந்தது. மழையால் சாந்திமேடு, வீரபாண்டி பிரிவு, செல்வபுரம், திருமலை நாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்புகளுக்கு செல்லும் சாலைகளில் இருசக்கர வாகனத்தில் சென்ற பலர் வழுக்கி விழுந்து காயம் அடைந்தனர்.
கவுண்டம்பாளையம், கவுண்டர்மில் பிரிவு, துடியலூர் பகுதிகளில் பெய்த கனமழையால் கோவை- மேட்டுப்பாளையம் சாலையில் மழைநீரானது ஆறுபோல் ஓடியது. இதனால் சாலையில் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்றன. இரவு முழுவதும் விட்டு விட்டு மழை பெய்தபடியே இருந்தது. நெ.24 வீரபாண்டி பகுதியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியின் சுற்றுச்சுவர் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. கோவையில் பல இடங்களில் மரங்களும், மின் கம்பங்களும் முறிந்து விழுந்தன. இதேபோல மணியகாரன்பாளையம், நல்லாம்பாளையம் பகுதிகளிலும் மழை வெளுத்து வாங்கியதால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.
மருதமலை பகுதியில் பெய்த மழையால் அங்குள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் தரிசனத்துக்கு சென்ற பக்தர்கள் அவதிக்குள்ளானார்கள். மழை ஓய்ந்ததை தொடர்ந்து இரவில் மெல்ல மெல்ல தண்ணீர் வடியத் தொடங்கியது. இன்று காலை முற்றிலும் தண்ணீர் வடிந்தது.
மாநகராட்சி ஆணையாளர் கட்டாரவி தேஜா மழை நீர் தேங்கி நின்ற இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். மாநகராட்சி ஊழியர்களை கொண்டு மோட்டார் மூலம் தண்ணீரை அகற்றும் பணி நடந்தது.