ராதாபுரம் மற்றும் நாங்குநேரி சுற்றுவட்டாரத்தில் இடி-மின்னலுடன் கனமழை கொட்டியதால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. அந்த பகுதிகளில் 5 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது.
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங் களில் வடகிழக்கு பருவமழைக்கான முன்னோட்டமாக கடந்த சில நாட்களாகவே பரவலாக மழை பெய்து வந்த நிலையில், பருவமழை தொடங்கிய முதல் நாளான நேற்று பல்வேறு இடங்களிலும் இடி-மின்னலுடன் கனமழை பெய்தது.
நெல்லை மாவட்டத்தில் நேற்று பல்வேறு இடங்களில் இடி-மின்னலுடன் கனமழை பெய்தது. அணைகளை பொறுத்தவரை மாவட்டத்தின் முக்கிய நீராதாரங்களான பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் கடந்த சில நாட்களாக நீர்மட்டத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் வடகிழக்குப் பருவமழை குறித்த நம்பிக்கையை அதிகரித்துள்ளன.
பாபநாசம் அணை ஒரு வாரமாக பெய்து வரும் சாரல் மழையால் நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது. கடந்த 10-ந்தேதி பாபநாசம் அணையின் நீர்மட்டம் 41.60 அடியாக இருந்தது. இன்று காலை நிலவரப்படி நீர்மட்டம் 44 அடியாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் 1 வாரத்தில் அணை நீர்மட்டம் 2 1/2 அடி அதிகரித்துள்ளது. அணைக்கு தற்போது விநாடிக்கு சுமார் 592 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து விநாடிக்கு 100 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அணைப் பகுதியில் 18 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
மணிமுத்தாறு அணையைப் பொறுத்தவரை, கடந்த 10-ந்தேதி 59.28 அடியாக இருந்த நீர்மட்டம், இன்று 60 அடியை எட்டியுள்ளது. அந்த அணை பகுதியில் 18 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. சேர்வலாறு அணையில் 26 மில்லிமீட்டரும், கன்னடியனில் 12 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது.
புறநகர் பகுதியை பொறுத்தவரை களக்காடு, மூலைக்கரைப்பட்டி, சேரன்மகாதேவி பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. அதேநேரத்தில் ராதாபுரம் மற்றும் நாங்குநேரி சுற்றுவட்டாரத்தில் இடி-மின்னலுடன் கனமழை கொட்டியதால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. அந்த பகுதிகளில் 5 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது.
தென்காசி மாவட்டத்தில் சிவகிரி மற்றும் சங்கரன்கோவில் பகுதியில் பிற்பகலில் தொடங்கிய கனமழை நள்ளிரவு வரை நீடித்தது. தொடர்ந்து இடி-மின்னலுடன் கூடிய கனமழை கொட்டித்தீர்த்தது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. இதனால் அடிக்கடி மின்தடை ஏற்பட்டது.
தென்காசி மாவட்டத்தில் மட்டும் ஒரே நாளில் 327.50 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. சிவகிரியில் அதிகப்பட்சமாக 10 சென்டிமீட்டர் மழை பதிவாகியது. சங்கரன்கோவில், செங்கோட்டையில் 4 சென்டிமீட்டரும், தென்காசியில் 30 சென்டி மீட்டரும், கடனா, ராமநதி அணை பகுதிகளிலும் 3 சென்டிமீட்டரும் மழை பதிவாகியது.
இதனால் தென்காசி மாவட்டத்தில் பொது மக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தற்போது பெய்த மழையை நம்பியும், கிணற்று நீரை நம்பியும், விவசாயிகள் விவசாய பணிகளை தொடங்கி உள்ளனர்.
மேற்கு தொடர்ச்சி மழை பகுதியில் பெய்த கனமழையால் குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஐந்தருவி உள்பட அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இன்று காலையில் வெள்ளம் தணியாததால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை நீடித்தது. மழை குறைந்து நீர்வரத்து சீரானதும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று முழுவதும் கனமழை கொட்டித்தீர்த்தது. கயத்தாறு, கடம்பூர், சாத்தான்குளம், கழுகு மலை, ஸ்ரீவைகுண்டம் சுற்று வட்டாரத்தில் கனமழை பெய்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக கயத்தாறில் 5 சென்டிமீட்டரும், சாத்தான்குளத்தில் 3 சென்டிமீட்டரும் மழை பெய்தது. திருச்செந்தூர் சுற்றுவட்டாரத்தில் சாரல் அடித்தது.