நீலகிரி மாவட்டத்தில் கனமழை மற்றும் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஊட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு நேரங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.
வண்டிச்சோலை பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதியின் தடுப்புச் சுவரின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது. இதுகுறித்து தகவலறிந்த ஊட்டி நகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, தடுப்புச்சுவரின் எஞ்சிய பகுதியும் இடிந்து விழும் அபாயத்தில் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, பொது மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அப்பகுதியில் தடுப்புகள் அமைக்கப்பட்டு, நடைபாதை தற்காலிகமாக மூடப்பட்டது.
இதனால் அந்த நடைபாதையை பயன்படுத்தி வந்த பொதுமக்கள் மாற்றுப்பாதைகளை பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மழைக்காலங்களில் மலைப்பகுதிகளில் அமைந்துள்ள தடுப்புச் சுவர்கள், சுற்றுச்சுவர்கள் மற்றும் மண்சரிவு ஏற்படக்கூடிய பகுதிகளை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக, வண்டிச்சோலை பகுதியில் அபாய நிலையில் உள்ள தடுப்புச்சு வரை முழுமையாக ஆய்வு செய்து, தேவையான பாதுகாப்பு மற்றும் சீரமைப்புப் பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
ஊட்டி தலையாட்டுமந்து குடியிருப்பு பகுதிகளுக்கு மின் விநியோகிக்கும் மின் கம்பியில் திடீரென தீப்பற்றி தீப்பொறிகள் சாலையில் விழுந்தன. இதனை கண்ட மக்கள் அதிர்ச்சியடைந்து உடனடியாக மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில் கனமழை மற்றும் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் முன்னறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில், பொதுமக்கள் மரங்களுக்கு அடியிலும், இடிந்து விழும் அபாயமுள்ள சுவர்களின் அருகிலும், மண்சரிவு ஏற்படக்கூடிய பகுதிகளிலும் நடமாடுவதை தவிர்க்குமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பருவ மழையால் பாதிக்கக்கூடிய பகுதிகள் குறித்து மாநில நெடுஞ்சாலை துறை நீலகிரி கோட்ட பொறியாளர் முருகன் தலைமையில் அதிகாரிகள் குழுவினர் அதிகரட்டி பகுதியில் முதற்கட்டமாக ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது அங்குள்ள வடிகால் கால்வாய்கள் மற்றும் கழிவுநீர் கால்வாய்கள் சாலையில் செல்வதை தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்ளப்பட்டது. இதனைத்தொடர்ந்து குன்னூர் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் நெடுஞ்சாலை ஓரத்தில் ஆபத்தான இடங்களை கண்டறிந்து அப்பகுதியில் மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதையும் ஆய்வு செய்யப்பட்டது.
சுற்றுலா தலங்களான டால்பின் நோஸ் மற்றும் லேம்ஸ் ராக் காட்சிமுனைகளுக்கு செல்லும் சாலைகளிலும் உள்ள சாலைகளை ஆய்வு மேற்கொண்டு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட நெடுஞ்சாலை துறை பொறியாளர் முருகன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.