தமிழக செய்திகள்

குமரி மாவட்டத்தில் பரவலாக சாரல் மழை

நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணையின் நீர்மட்டம் 5 அடியாக உள்ளது.

சுசீந்திரம், தக்கலை மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் காலை முதலே அவ்வப்போது விட்டு விட்டுச் சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது.

குமரி மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக பேச்சிப்பாறை மற்றும் பெருஞ்சாணி அணை பகுதிகளில் விட்டுவிட்டு கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.

மாவட்ட முழுவதும் கடந்த சில நாட்களாகவே சீதோஷ்ண நிலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டு மழை பெய்து வந்த நிலையில், நேற்று இரவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக சாரல் மழை பெய்தது. நாகர்கோவிலில் இன்று அதிகாலை நேரத்தில் மழை பெய்யத் தொடங்கியது.

மழை

சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக விட்டு விட்டுச் சாரல் மழை பெய்தது. காலை நேரத்தில் பெய்த மழையின் காரணமாக மாணவ-மாணவிகள் குடை பிடித்தவாறும், மழை கோட் அணிந்தவாறும் பள்ளிக்கு வந்தனர்.

கன்னியாகுமரி பகுதியிலும் காலை முதலே வானத்தில் கருமேகங்கள் திரண்டு காணப்பட்டன. இதனால் சூரிய உதயத்தை காண முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். கன்னியாகுமரி கடற்கரை பகுதியிலும் அதிகாலையில் சாரல் மழை பெய்தது.

சுசீந்திரம்

அஞ்சுகிராமம், புத்தேரி, மயிலாடி, சாமித்தோப்பு, சுசீந்திரம், தக்கலை மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் காலை முதலே அவ்வப்போது விட்டு விட்டுச் சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. மழை ஒருபுறம் பெய்து கொண்டிருந்தாலும், ஒருசில இடங்களில் வெயிலும் அடித்தது.

திருப்பரப்பு அருவி பகுதியில் பெய்து வரும் சாரல் மழையால் அங்கு ரம்மியமான சூழல் நிலவியது. அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.

பேச்சிப்பாறை அணை

பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 18.89 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 486 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 693 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 40.55 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 36 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 75 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. சிற்றாறு-1 அணை நீர்மட்டம் 13.58 அடியாகவும், சிற்றாறு-2 அணை நீர்மட்டம் 13.67 அடியாகவும், பொய்கை அணை நீர்மட்டம் 16.70 அடியாகவும், மாம்பழத்துறை அணை நீர்மட்டம் 33.63 அடியாகவும் உள்ளது.

நாகர்கோவில்

நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணையின் நீர்மட்டம் 5 அடியாக உள்ளது. அணைகளில் நீர்மட்டம் சரிந்து காணப்பட்டாலும், பாசன குளங்களில் போதுமான அளவு தண்ணீர் உள்ளது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கன்னிப் பூ அறுவடை பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பல்வேறு இடங்களில் விவசாய பணிகள் நடைபெற்று வருகின்றன. சுசீந்திரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வயல் உழவு பணி மற்றும் நடவு பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

SCROLL FOR NEXT