வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. அது இன்று தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நாளை புயலாக உருவாகிறது.
பின்னர் அந்த புயல் தொடர்ந்து மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெற்று மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆந்திர கடலோர பகுதிக்கு அருகில் 28-ந்தேதி காலை கரையை கடக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்த நிகழ்வு காரணமாக தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகவே பகல் நேரங்களில் மழையின்றி வானம் மேகமூட்டத்துடனும், இரவு நேரங்களில் கனமழையும் கொட்டி தீர்த்து வருகிறது.
நேற்றும் காலையில் மழை பெய்தது. அதன்பிறகு மழை ஓய்ந்து வெயில் அடித்தது. மாலை வரை மிதமான வெயிலே காணப்பட்டது.
இரவு 10 மணிக்கு பிறகு கடலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சாரல் மழை பெய்தது. அதனை தொடர்ந்து நள்ளிரவு முதல் கடலூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான புதுப்பாளையம், கடலூர் முதுநகர், மஞ்சக்குப்பம், திருப்பாதிரிப்புலியூர் உள்ளிட்ட பகுதிகளிலும் புறநகர் பகுதிகளான விருத்தசாலம், நெய்வேலி, பண்ருட்டி, காட்டுமன்னார் கோவில், சிதம்பரம் உள்பட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் கனமழை கொட்டி தீர்த்தது. இந்த மழையால் மாவட்டத்தில் உள்ள முக்கிய சாலைகளில் அனைத்திலும் மழைநீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது.
திட்டக்குடி அருகே அரங்கூர் பகுதியில் வெள்ளாறு செல்கிறது. கடந்த சில மாதங்களாக மழை இல்லாத காரணத்தால் இந்த ஆறு வறண்டு கிடந்தது. மேலும் ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் ஒன்று கட்டும் பணியும் நடந்து வருகிறது.
ஆறு வறண்டு கிடந்ததால் இங்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு பொருட்காட்சி ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. இங்கு பெரிய அளவிலான ராட்டினங்கள் உள்பட குழந்தைகளை கவரும் பல்வேறு விதமான பொழுது போக்கு அம்சங்கள் இடம் பெற்றிருந்தன. இதுதவிர பொருட்காட்சி கூடாரங்களும் அமைக்கப்பட்டு இருந்தன.
பொருட்காட்சியை அரங்கூர் மற்றும் சுற்று வட்டார கிராம பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் வந்திருந்து பார்த்து சென்றனர். பொருட்காட்சி நடப்பதையொட்டி அங்கு 9 ஊழியர்கள் பணியாற்றி வந்தனர். அவர்கள் அங்கேயே தங்கி இருந்தனர்.
நேற்று வழக்கம்போல் பொருட்காட்சியை முடித்து ஊழியர்கள் அனைவரும் ஆற்றில் அமைத்திருந்த தங்களது கூடாரங்கில் படுத்து தூங்கினர்.
இந்த நிலையில் திட்டக்குடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதலே கனமழை கொட்டி தீர்த்தது. விடிய, விடிய பெய்த மழை காரணமாக இன்று அதிகாலை வெள்ளாற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இந்த திடீர் வெள்ளப்பெருக்கால் வெள்ளாற்றில் அமைக்கப்பட்டிருந்த பொருட்காட்சி அப்படியே ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. பொருட்காட்சியில் இடம் பெற்றிருந்த பொருட்கள் அனைத்தும் ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.
ஆற்றில் கூடாரத்தில் தங்கி இருந்த 9 ஊழியர்களும் தண்ணீர் வரத்து அதிகரித்ததை உணர்ந்ததும் உடனடியாக எழுந்து, அங்கு நின்றிருந்த லாரி, ராட்டினங்கள் மீது ஏறி நின்று கொண்டனர். இதுகுறித்து பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
தகவல் அறிந்ததும் குன்னம் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, வெள்ளத்தில் சிக்கிய ராஜூ (30), கிருஷ்ணமூர்த்தி, கல்யாண சுந்தரம் (26), ராஜாராம் (35), தினேஷ், வரதராஜ பெருமாள், பெரியசாமி, கார்த்தி, பரத், கார்த்தி ஆகிய 9 பேரையும் கயிறு கட்டி பத்திரமாக மீட்டனர்.
தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் வெள்ளாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில், ஆற்றங்கரையோர பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் ஆற்றைக் கடந்து செல்லும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியமாகும்.