தமிழக செய்திகள்

கோவை - நீலகிரியில் கனமழை: அடுத்தடுத்து இடிந்து விழுந்த வீடுகள்

சாலையோர மண் பகுதிகளில் ஈரப்பதம் அதிகரித்து, சில இடங்களில் மண் சரிவு ஏற்படும் அபாயம் நிலவுகிறது.

குன்னூர், கோத்தகிரி பகுதிகளில் அடுத்தடுத்து நிகழ்ந்துள்ள இந்த சம்பவங்கள், மலைப்பகுதிகளில் உள்ள தடுப்புச் சுவர்களின் பாதுகாப்பை ஆய்வு செய்ய வேண்டிய அவசியத்தை உணர்த்தியுள்ளன.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக, 2 வீடுகள் இடிந்து சேதமடைந்துள்ளன. காரமடை நகராட்சிக்குட்பட்ட கிட்டாம்பாளையம் பகுதியில், ராமசாமி என்பவருக்கு சொந்தமான வீடு கனமழையால் திடீரென இடிந்து விழுந்தது.

இதேபோல், அதே பகுதியில் மற்றொரு ராமசாமி என்பவருக்கு சொந்தமான வீட்டின் மேற்கூரையும் இடிந்து விழுந்து சேதமடைந்தது. இந்த சம்பவம் நடைபெற்றபோது, 2 வீடுகளிலும் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் வீடுகள் சேதமடைந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரியில் மண் சரிவு அபாயம்

நீலகிரி மாவட்டத்தில் கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் சாலையோர மண் பகுதிகளில் ஈரப்பதம் அதிகரித்து, சில இடங்களில் மண் சரிவு ஏற்படும் அபாயம் நிலவுகிறது.

தடுப்பு சுவர் இடிந்தது

இந்நிலையில் கோத்தகிரி கீ ஸ்டோன் பகுதியில் கடந்த 17-ந்தேதி சாலையோரத்தில் அமைக்கப்பட்டிருந்த தடுப்புச் சுவர் திடீரென இடிந்து விழுந்தது. அப்போது அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீட்பு லாரி மீது தடுப்புச்சுவரின் இடிபாடுகள் விழுந்ததில், லாரி பலத்த சேதமடைந்தது. சம்பவம் நடைபெற்ற நேரத்தில் லாரிக்குள் யாரும் இல்லாததால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

பள்ளத்தில் விழுந்த டிப்பர் லாரி

இதேபோன்று, குன்னூரில் சிம்ஸ் பூங்காவுக்கு செல்லும் சாலையில் உள்ள கிரேஸில் பகுதியில் சாலையோரமாக மணல் ஏற்றப்பட்ட டிப்பர் லாரி ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக தடுப்புச்சுவர் இடிந்து விழுந்ததில், லாரி நிலைதடுமாறி அருகிலிருந்த பள்ளத்தில் விழுந்தது. இதில் இருந்த டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

குன்னூர், கோத்தகிரி பகுதிகளில் அடுத்தடுத்து நிகழ்ந்துள்ள இந்த சம்பவங்கள், மலைப்பகுதிகளில் உள்ள தடுப்புச் சுவர்களின் பாதுகாப்பை ஆய்வு செய்ய வேண்டிய அவசியத்தை உணர்த்தியுள்ளன.

குன்னூர், கோத்தகிரி, ஊட்டி உள்ளிட்ட மலைப்பகுதிகளில் சாலையோரங்களில் அமைந்துள்ள பழமையான மற்றும் சேதமடைந்த தடுப்பு சுவர்களை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

எனவே, கனமழைக் காலங்களில் ஆபத்தான பகுதிகளை கண்டறிந்து எச்சரிக்கை பலகைகள் அமைப்பதுடன், தேவையான இடங்களில் வாகனங்கள் நிறுத்தப்படுவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டு வருகிறது.

SCROLL FOR NEXT