குமரி மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, நேற்று இரவு மாவட்டம் முழுவதும் விடிய விடிய கனமழை கொட்டித்தீர்த்தது. தொடர்ந்து இன்று காலையும் மழை நீடிப்பதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
நாகர்கோவிலில் இன்று காலை முதலே விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. தொடர் மழையின் காரணமாக சாலைகளில் தண்ணீர் கரைபுரண்டு ஓடியது. குறிப்பாக கோட்டாறு சாலை, அசெம்பிளி ரோடு, அவ்வை சண்முகம் சாலை ஆகிய பகுதிகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மழையையும் பொருட்படுத்தாமல் பள்ளி மாணவ-மாணவிகள் குடைகளை பிடித்தவாறு பள்ளிக்கு சென்றனர். இருசக்கர வாகனங்களில் குழந்தைகளை அழைத்து வந்த பெற்றோர், மழையில் நனைந்தபடியும், ரெயின்கோட் அணிவித்தும் தங்களது குழந்தைகளை பள்ளிகளில் விட்டனர்.
கன்னியாகுமரி பகுதியிலும் இன்று காலை முதலே பரவலாக மழை பெய்தது. வானத்தில் கார்மேகங்கள் சூழ்ந்து காணப்பட்டதால், இன்று காலையில் சூரிய உதயத்தை காண முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர். தொடர் மழையின் காரணமாக பொதுமக்களின் நடமாட்டம் குறைந்து, கடற்கரை பகுதியும் வெறிச்சோடி காணப்பட்டது.
இதேபோல் சுசீந்திரம், ஆரல்வாய்மொழி, அஞ்சுகிராமம், சாமிதோப்பு, தக்கலை, மயிலாடி, குளச்சல், கீரிப்பாறை, களியல் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று இரவு இடைவிடாது கொட்டிய கனமழையால், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. ஒரு சில இடங்களில் குடியிருப்பு பகுதிகளையும் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
திற்பரப்பு அருவி பகுதியிலும் தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருக்கிறது. அங்கு அதிகபட்சமாக 68.6 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. மழையின் காரணமாக அருவியில் வெள்ள நீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. பாதுகாப்பு கருதி, அருவியின் ஒரு சில பகுதிகளில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இதனால் இன்று சுற்றுலா பயணிகளின் வருகையும் குறைவாகவே இருந்தது.
பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதிகள் மற்றும் மலையோர பகுதியான பாலமோர் பகுதிகளிலும் தொடர்ந்து பெய்து வரும் மழையால், அணைகளுக்கு வரும் நீர்வரத்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
ஒரே நாளில் பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 2 அடி உயர்ந்து, இன்று காலை நிலவரப்படி 35.05 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 2,406 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 490 கன அடி தண்ணீர் உபரியாக வெளியேற்றப்படுகிறது.பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடி உயர்ந்து, தற்போது 61.85 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 2,770 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
நாகர்கோவில் நகர மக்களின் குடிநீர் ஆதாரமான முக்கடல் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடி உயர்ந்து, தற்போது 4.90 அடியாக உள்ளது. மாம்பழத்துறையாறு அணையின் நீர்மட்டம் 29.30 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் மழையின் காரணமாக வள்ளியாறு, பரளியாறு, பழையாறு ஆகிய ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் பாசன குளங்களும் வேகமாக நிரம்பி வருகின்றன. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், பொதுமக்கள் யாரும் ஆற்றின் கரையோர பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காளிகேசம் பகுதியிலும் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. கீரிப்பாறை, குலசேகரம், தடிக்காரன்கோணம் ஆகிய பகுதிகளில் உள்ள ரப்பர் தோட்டங்களில் மழைநீர் தேங்கியுள்ளதால் ரப்பர் பால் உற்பத்தி முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் வேலையின்றி தவித்து வருகிறார்கள்.
இதேபோல் தோவாளை பகுதியில் உள்ள செங்கல் சூளைகளிலும் மழைநீர் தேங்கியுள்ளது. செங்கல் உற்பத்தி செய்யப்பயன்படும் மண் முழுவதும் சேறும் சகதியுமாக மாறியுள்ளதால், செங்கல் உற்பத்தியும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இன்றும் குமரி மாவட்டம் முழுவதும் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனை தொடர்ந்து, மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை மற்றும் நிவாரண பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.