தமிழக செய்திகள்

கனமழை பெய்ய வாய்ப்பு-தமிழகத்தில் நாளை முதல் வெயிலின் தாக்கம் குறையும்

சென்னையில் அனல் காற்று வீசுவதற்கு காரணம் கடல் காற்று இல்லாததான்.

தென்மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்கியதை தொடர்ந்து தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. ஆனாலும் வெப்பத்தின் தாக்கம் இன்னும் குறையவில்லை.

சென்னையில் அதிகபட்சமாக 103 டிகிரி வெயில் நேற்று கொளுத்தியது. அனல் காற்று வீசியது. மாலை 5 மணி வரை வெயிலின் தாக்கம் இருந்தது. இன்றும் அதே போல வெப்பம் அதிகரிக்கும். இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகமாக இருக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய மண்டல இயக்குனர் துரை கூறியதாவது:-

தமிழகத்தில் இன்று அதிகபட்ச வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் நிலையில் வட கடலோர தமிழகம் மற்றும் வட உள் தமிழகத்தில் ஓரு சில இடங்களில் வெப்பம் சார்ந்த அசவுகரியங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

சென்னையில் 39 முதல் 40 செல்சியஸ் வெப்பம் பதிவாக கூடும். வெப்பம் சார்ந்த அசவுகரியம் ஏற்படலாம்.

சென்னையில் அனல் காற்று வீசுவதற்கு காரணம் கடல் காற்று இல்லாததான். மாலையில் கூட வெப்பத்தின் தாக்கம் இருந்து வருகிறது. கடலில் இருந்து வரும் காற்று வரவில்லை .

அதனால் இந்த தாக்கம் உள்ளது. இரவு நேரத்தில் கூட 30 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. இது இயல்பை விட அதிகமாக உள்ளது. வழக்கமாக 26, 27 செல்சியஸ் டிகிரி காணப்படும்.

வெப்பத்தின் தாக்கம் நாளை முதல் படிப்படியாக குறையும். மே மாதத்தில் 40 டிகிரி செல்சியஸ் அதிக மாவட்டங்களில் பதிவாகி உள்ளன. இது கடந்த ஆண்டை விட குறைவா? அதிகமா? என்பதை ஆய்வு செய்து வருகிறோம்.

வெயில்

கரூர், ஈரோடு, மதுரை, திருச்சி, வேலூர் மாவட்டங்களில் கடந்த வருடத்தை போலவே மே மாதம் வெயில் பதிவாகி உள்ளது.

ஜூன் மாதத்தில் வட தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், வேலூர் மாவட்டங்களில் வெப்பம் அதிகரித்தது.

மழை

இதற்கிடையில் தமிழகத்தில் 13-ந் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. ஒரு சில மாவட் டங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

நெல்லை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி கோவை, கன்னியாகுமரி, திண்டுக்கல், சேலம், ஈரோடு, தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் ஒரு இடங்களில் இன்று கனமழை பெய்யும்.

10 மற்றும் 11-ந்தேதிகளில் நெல்லை மாவட்டம் மலைப் பகுதிகள், கன்னியாகுமரி, கோவை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, சேலம் மாவட்டங்களில் ஒரு இடங்களில் கன மழை பெய்யக் கூடும்.

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். கோடை மழை பெய்யக்கூடும்.

இவ்வாறு அவர் கூறினார்.