தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நேற்று தொடங்கியது. இதையடுத்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.
கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று இரவு 8 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை தொடர்ந்து இரவு முழுவதும் பெய்து கொண்டே இருந்தது. கோவை காந்திபுரம், சந்திப்பு ரெயில் நிலையம், ஆவாரம்பாளையம், புலியகுளம், ராமநாதபுரம், குனியமுத்தூர், சிங்கநல்லூர் உள்ளிட்ட கோவை மாநகர் பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது.
துடியலூர், பன்னீர்மடை கணுவாய், வரப்பாளையம் தடாகம், சோமயனூர், நஞ்சுண்டாபுரம், ஆனைக்கட்டி, கவுண்டம்பாளையம், நரசிம்மநாயக்கன்பாளையம், பெரியநாயக்கன் பாளையம் மற்றும் அதைச் சுற்றி உள்ள பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை கொட்டித்தீர்த்தது. குனியமுத்தூர் இ.பி.காலனியில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.
பொள்ளாச்சியில் மாலையில் தொடங்கிய மழை இரவு வரை நீடித்தது. இதனால் நியூ ஸ்கீம் ரோட்டில் மழைநீர் குளம்போல் தேங்கியது. பொள்ளாச்சி- திண்டுக்கல் 4 வழிச்சாலையில் ஆச்சி பட்டியில் புதிதாக கட்டப்பட்ட மேம்பாலத்தில் மழை நீர் தேங்கி நின்றது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர்.
ஊட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ½ மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த மழையால் நகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
குன்னூர் பகுதியில் நேற்று இரவு முதல் காலை வரை தொடர் மழை பெய்து வருகிறது. மழையால் மரங்கள் முறிந்து சாலையில் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தேனி மாவட்டத்தில் நேற்று மாலை 5 மணிக்கு தொடங்கிய மழை தேனி, ஆண்டிபட்டி, வீரபாண்டி, பெரியகுளம், சோத்துப்பாறை, போடி, வைகை அணை உள்ளிட்ட பகுதிகளில் வெளுத்து வாங்கியது.
இதனால் கும்பக்கரை, சுருளி, அணைப்பிள்ளையார் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அங்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆண்டிபட்டி சுற்று வட்டார பகுதிகளில் சுமார் 4 மணி நேரத்துக்கும் மேலாக பெய்த கனமழையால் சங்கம்பட்டி முத்து மாரியம்மன் கோவில் அருகே உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளியை மழை நீர் சூழ்ந்தது. இதனால் பள்ளிக்கு செல்ல முடியாமல் மாணவர்கள் அவதியடைந்தனர்.
குரங்கணி, கொட்டக்குடி, பீச்சாங்கரை, ஊத்தம்பாறை பகுதிகளில் இடி-மின்னலுடன் பெய்த மழையினால் அணைப் பிள்ளையார் தடுப்பணையை கடந்து வெள்ள நீர் செல்கிறது.
கடலூர் மாவட்டத்திலும் கடந்த சில தினங்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்றும் கடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து கொண்டே இருந்தது.
கள்ளக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடி, மின்னலுடன் கனமழை கொட்டி தீர்த்தது. கச்சிராயப்பாளையம், சங்கராபுரம், அரியலூர், ரிஷிவந்தியம், திருக்கோவிலூர், சின்னசேலம், தியாகதுருகம் என மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது.
சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் மழை பெய்த நிலையில் 2-வது நாளாக நேற்றும் பரவலாக மழை பெய்தது. கெங்கவல்லி, தம்மம்பட்டி, ஏத்தாப்பூர், சங்ககிரி, ஓமலூர் உள்பட பல்வேறு பகுதிகளில் நேற்று 2 மணி நேரத்திற்கும் மேலாக கன மழை கொட்டியது. இந்த மழையால் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியது. மேலும் சிற்றோடைகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
நாமக்கல் நகரம், எருமப்பட்டி, குமாரபாளையம், மோகனூர், பரமத்திவேலூர், ராசிபுரம், திருச்செங்கோடு, கொல்லிமலை என மாவட்டம் முழுவதும் பரவலாக மழை கொட்டியது. நாமக்கல் நகரில் நேற்று மாலை 4 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை தொடர்ந்து விடிய, விடிய கொட்டி தீர்த்தது.
கரூர் தாந்தோணி மலை, காந்திகிராமம், வெங்கமேடு, பசுபதிபாளையம் உள்பட பல்வேறு பகுதிகளில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது.
திருச்சி மாவட்டம் உப்பிலியபுரத்தை அடுத்துள்ள கொல்லிமலை நீர்ப்பிடிப்பு பகுதி மற்றும் புளியஞ்சோலை பகுதிகளில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அய்யாற்று நீர்வரத்தில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் புளியஞ்சோலை பகுதிக்கு செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். பெரம்பலூரில் நேற்று இரவு சுமார் 8 மணியளவில் திடீரென்று மழை பெய்ய தொடங்கியது. சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பலத்த மழையாக கொட்டி தீர்த்தது.
மதுரை மாநகர், புறநகர் பகுதிகளில் நேற்று மாலை கனமழை பெய்தது. சுமார் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக மழை வெளுத்து வாங்கியது. பெரியார் பஸ் நிலையம், சிம்மக்கல், கோரிப்பாளையம், தெப்பக்குளம், காளவாசல், திருப்பரங்குன்றம், பழங்காநத்தம், திருநகர் என பெரும்பாலான இடங்களில் பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் நேற்று மாலை இடி மின்னலுடன் கனமழை பெய்தது. ராஜபாளையம் நகருக்கு குடிநீர் ஆதாரமாக திகழும் மேற்கு தொடர்ச்சி மலை அய்யனார் கோவில் பகுதியில் கனமழை பெய்ததால் மலட்டாறு, அய்யனார் கோவில் ஆறுகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
நெல்லை மாவட்டத்தில் நேற்று பல்வேறு இடங்களில் இடி-மின்னலுடன் கனமழை பெய்தது. ஒரு வாரமாக பெய்து வரும் சாரல் மழையால் பாபநாசம் அணைக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது. கடந்த 10-ந்தேதி பாபநாசம் அணையின் நீர்மட்டம் 41.60 அடியாக இருந்தது. இன்று காலை நிலவரப்படி நீர்மட்டம் 44 அடியாக உயர்ந்துள்ளது. கடந்த 10-ந்தேதி 59.28 அடியாக இருந்த மணிமுத்தாறு அணை நீர்மட்டம், இன்று 60 அடியை எட்டியுள்ளது.
களக்காடு, மூலைக்கரைப்பட்டி, சேரன்மகாதேவி பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. ராதாபுரம், நாங்குநேரி பகுதிகளில் இடி-மின்னலுடன் கனமழை கொட்டியதால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது.
தென்காசி மாவட்டத்தில் சிவகிரி மற்றும் சங்கரன்கோவில் பகுதியில் பிற்பகலில் தொடங்கிய கனமழை நள்ளிரவு வரை நீடித்தது. தென்காசி மாவட்டம் சிவகிரியில் அதிகபட்சமாக 10 சென்டிமீட்டர் மழை பதிவானது.
மேற்கு தொடர்ச்சி மழை பகுதியில் பெய்த கனமழையால் குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஐந்தருவி உள்பட அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இன்று காலை 10 மணியளவில் நீர்வரத்து குறைந்ததால் அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.
தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று முழுவதும் கனமழை கொட்டித்தீர்த்தது. கயத்தாறு, கடம்பூர், சாத்தான்குளம், கழுகுமலை, ஸ்ரீவைகுண்டம் சுற்று வட்டாரத்தில் கனமழை பெய்தது. கயத்தாறில் 5 சென்டிமீட்டரும், சாத்தான்குளத்தில் 3 சென்டிமீட்டரும் மழை பெய்தது. திருச்செந்தூர் சுற்றுவட்டாரத்தில் சாரல் அடித்தது.
குமரி மாவட்டத்தில் நேற்று மதியத்திற்கு பிறகு இடி மின்னலுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. நாகர்கோவிலில் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டியது. கோட்டாறு சாலை, அவ்வை சண்முகம் சாலை, அசம்பு ரோடு உள்பட அனைத்து சாலைகளிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.
நாகராஜா கோவில் அருகே கழிவுநீருடன் மழை நீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியதால், அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்தது. வீடுகளுக்குள் புகுந்த தண்ணீரை பொதுமக்கள் வெளியேற்றினர்.
மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் மழை பெய்தது. மாம்பழத்துறையாறு, இரணியல், குளச்சல், தக்கலை, கன்னிமார், குழித்துறை, சுருளோடு, முள்ளாங்கியாவிளை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது.
அடையாமடை பகுதியில் சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் அப்பகுதி வெள்ளக்காடானது. திற்பரப்பு அருவிப்பகுதியில் கனமழை கொட்டியது. வெள்ளப்பெருக்கு காரணமாக அருவியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. இன்று காலையிலும் திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதனால் அருவியின் ஒருபுறத்தில் மட்டும் குளிக்க சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைப்பகுதியில் கொட்டித் தீர்த்த மழையின் காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.