தமிழக செய்திகள்

சென்னையில் வெளுத்து வாங்கிய கனமழை: கடந்த 24 மணிநேரத்தில் பல்வேறு பகுதிகளில் பதிவான மழை விவரம்!

சுமார் 20 முதல் 30 சதுர மீட்டர் பரப்பளவுக்குள், ஒரு மணி நேரத்தில் 10 சென்டி மீட்டருக்கும் அதிகமாக மழை பொழிந்தால் அது மேகவெடிப்பு என்று அழைக்கப்படுகிறது.

சென்னையில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், நேற்று முன்தினம் மாலையில் தொடங்கிய மழை நகரின் பல பகுதிகளில் கனமழையாகக் கொட்டித் தீர்த்தது.

சென்னையில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், நேற்று முன்தினம் மாலையில் தொடங்கிய மழை நகரின் பல பகுதிகளில் கனமழையாகக் கொட்டித் தீர்த்தது. குறிப்பாக வடசென்னை பகுதிகளில் இந்த மழை வெளுத்து வாங்கியது. வழக்கமான மழையை விஞ்சி, மேகவெடிப்பு காரணமாக இந்த கனமழை பெய்துள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மேகவெடிப்பின் தாக்கம்

சுமார் 20 முதல் 30 சதுர மீட்டர் பரப்பளவுக்குள், ஒரு மணி நேரத்தில் 10 சென்டி மீட்டருக்கும் அதிகமாக மழை பொழிந்தால் அது மேகவெடிப்பு என்று அழைக்கப்படுகிறது. அந்த வகையில், வடசென்னைக்கு உட்பட்ட கார்கில் நகரில் 10.9 சென்டி மீட்டரும், திருவள்ளூர் மாவட்டம் மெப்பேடு பகுதியில் 10 செ.மீ. அளவிலும் மழை கொட்டியது. இதனால் இப்பகுதிகளில் மழைநீர் சாலைகளில் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியதுடன், தாழ்வான பகுதிகளில் குளம்போல தேங்கியது.

சென்னையில் கடந்த 24 மணிநேரத்தில் பல்வேறு பகுதிகளில் பதிவான மழையின் விவரம்

* பாரிமுனை: 36 செ.மீ.

* கத்திவாக்கம்: 34.4 செ.மீ.

* மீனம்பாக்கம்: 29 செ.மீ.

* சென்னை சென்ட்ரல்: 27 செ.மீ.

* சாத்தாங்காடு: 26 செ.மீ.

* திருவொற்றியூர்: 22 செ.மீ.

* எண்ணூர்: 21 செ.மீ.

* கார்கில் நகர்: 19 செ.மீ.

* சைதாப்பேட்டை: 17 செ.மீ.

* வடபழனி: 16 செ.மீ.

* நுங்கம்பாக்கம்: 15 செ.மீ.

சென்னையில் இன்று காலை 6 மணி நிலவரப்படி அனைத்து சுரங்கப்பாதைகளிலும் போக்குவரத்து சீராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக திருவொற்றியூர் மற்றும் சந்தோஷபுரம் உள்ளிட்ட 10 இடங்களில் விழுந்த மரங்கள் தீயணைப்புப் படையினரால் உடனடியாக அகற்றப்பட்டன. மேலும், தியாகராய நகர் உள்பட 4 இடங்களில் சாலையோர மின் இணைப்புப் பெட்டிகளில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாகச் சிறிய தீ விபத்துகள் நிகழ்ந்தன. அவை உடனடியாகக் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டன.

சென்னையில் நள்ளிரவு வரை கொட்டித்தீர்த்த இந்த கனமழையால், அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப் படை முகாமில் இருந்து ஒரு சிறப்புக் குழுவினர் சென்னை வந்துள்ளனர். மாநில பேரிடர் மீட்பப் படையினருடன் இணைந்து தாழ்வான பகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய மீட்புப் பணிகள் குறித்து அமைச்சரும், மாநகராட்சி ஆணையரும் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினருடன் தீவிர ஆலோசனை நடத்தினர். மழை நீர் தேங்கினாலோ அல்லது அவசர உதவிகள் தேவைப்பட்டாலோ பொதுமக்கள் '1913' என்ற அவசர உதவி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என்று சென்னை மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

SCROLL FOR NEXT