தமிழ்நாட்டில் கோடை வெயிலின் உச்சம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அக்னி நட்சத்திரம் எனும் கத்தரி வெயில் மே 4-ல் தொடங்கிய பிறகு அதன் தாக்கம் அதிகம் காணப்படுகிறது. இது 28-ந்தேதி முடிவடைய உள்ள நிலையில் பல மாவட்டங்களில் வெயில் அதிகம் சுட்டெரிக்கிறது. இதனால் பகல் நேரங்களில் மக்கள் வெளியில் செல்வதை தவிர்த்து வந்தனர்.
அதிலும் கடந்த 1 வாரமாக சென்னை, வேலூர், திருச்சி, சேலம், தர்மபுரி, கரூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் வெயிலின் உக்கிரம் அதிகமாக இருந்ததால் அனல் காற்று வீசியது.
ஆனால் வழக்கத்துக்கு மாறாக சென்னையில் நேற்று காலையில் கரு மேகங்கள் சூழ்ந்து பலத்த காற்று வீசியது. ஒரு சில இடங்களில் சாரல் மழை பெய்தது. கோடை காலத்தில் சென்னையில் ஏற்பட்ட காலமாற்றத்தால் வங்க கடலில் இருந்து ஈரப்பதம் கொண்ட வடகிழக்கு கடல் காற்று வீசியதால் நேற்று வெப்பம் தணிந்து இருந்தது.
ஆனால் இன்றைக்கு மீண்டும் வெயில் சுட்டெரிக்க தொடங்கி விட்டது. சென்னை, வேலூர், திருச்சி உள்பட பல நகரங்களில் 104 டிகிரிக்கு மேல் வெயில் சுட்டெரிக்க துவங்கியது. தமிழ்நாட்டில் வளிமண்டல சுழற்சி காரணமாக சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் வெப்ப அலை வீச வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
2 நாட்களுக்கு வெப்பத்தின் தாக்கம் அதிகம் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் வெயிலில் செல்வதை தவிர்க்கவும். போதுமான அளவு தண்ணீர் மற்றும் நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.