தாராபுரத்தில் தவெக வேட்பாளர் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதற்கு அமைச்சர் நிர்மல் குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் நிர்மல்குமார், கோவை விமான நிலையத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தாராபுரம் பிரசாரத்தில் பங்கேற்ற முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தவெக வேட்பாளர் சத்தியபாமாவை தரக்குறைவாகவும், உருவகேலி செய்யும் வகையிலும் பேசி உள்ளார். இதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்.
இதுதொடர்பாக அவர் மீது தேர்தல் ஆணையத்தில் புகார் செய்ய உள்ளோம். தனியாக வந்து அரசியல் களத்தில் போராடி வரும் பட்டியலின பெண்ணை அவமதிக்கும் வகையில் பேசுவது கண்டிக்கத்தக்கது.
ஒரு பெண்ணைப் பற்றி பொதுக்கூட்டத்தில் எவ்வாறு பேச வேண்டும் என்பதுகூட தெரியாமல் தி.மு.க.வினர் தரம் தாழ்ந்து பேசி வருகிறார்கள்.
தி.மு.க.வினர் தங்களது மனதில் உள்ளதை பிரசாரத்தில் வெளிப்படையாக பேசுகிறார்கள். விரக்தியின் உச்சத்தில் பேசி வரும் தி.மு.க.வினருக்கு மீண்டும் தோல்விதான் கிடைக்கும்.
தமிழக வெற்றிக் கழகம் எந்த நிலையிலும் ஓட்டுக்காக பணம் கொடுக்கவில்லை. அது எங்களது நிலைப்பாடு கிடையாது. நாங்கள் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததற்கான ஆதாரத்தை கம்யூனிஸ்டு தலைவர் சண்முகம் நிரூபிக்க வேண்டும்.
சட்டசபை இடைத்தேர்தலில் 2 தொகுதிகளிலும் த.வெ.க. வேட்பாளர்கள் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்கள்.
தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகள் டெபாசிட் இழக்கும். இப்போது இருப்பது எடப்பாடி பழனிச்சாமி அ.தி.மு.க. தான். சொந்த சுயநலனுக்காக அவர் கட்சியை முடித்துவிட்டார்.
இனிவரும் காலங்களில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. ஆகிய 3 கட்சிகளும் இணைந்து டெபாசிட் வாங்குவதற்காக தேர்தலில் இணைந்து போட்டியிடும் சூழல் வரும்.
நாங்கள் ஏற்கனவே வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான எங்களின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தி உள்ளோம். எஸ்.ஐ.ஆர். இல்லாமல் இருந்திருந்தால் சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றி கழகம் இன்னும் பெரிதாக வெற்றி பெற்று இருக்கும்.
முதலமைச்சர் விஜய் வருகையின்போது பொது
மக்களின் பாதுகாப்புக்காக தான் இரும்பு தடுப்புகள் வைக்கப்படுகிறது.
தமிழகத்தில் மின் வினியோகம் தொடர்பாக சிறு-சிறு பிரச்சினை வந்தாலும் அதனை உடனடியாக சரிசெய்து வருகிறோம். ஓரிரு மாதங்களில் நீண்டகால மின்சார தேவை குறித்த டெண்டர்விடப் போகிறோம். தமிழகத்தில் கூடிய விரைவில் மின்வினியோகம் சீராகி விடும்.
இவ்வாறு அவர் கூறினார்.