தமிழக செய்திகள்

கோவிலில் தரை வாடகை செலுத்தி கடை நடத்துபவர்களை அப்புறப்படுத்த கூடாது - ஐகோர்ட் உத்தரவு

கடைகளை உடனடியாக அகற்றும்படி உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.கோவிலுக்கு சொந்தமான இடத்தில் உள்ள அனைத்து கடைகளையும் கடந்த ஜனவரி 29-ந் தேதிக்குள் அகற்ற உத்தரவிட்டிருந்தது.

Maalaimalar

மதுரை:

கன்னியாகுமரியில் இயங்கி வரும் தமிழ்நாடு தகவல் அறியும் உரிமைச் சட்ட பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் தங்கராஜ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், கன்னியாகுமரி திருவேணி சங்கமம் கடற்கரை மற்றும் பகவதி அம்மன் கோவிலுக்கு சொந்தமான இடங்களில் ஏராளமானவர்கள் கடைகள் வைத்து வியாபாரம் செய்கின்றனர். இதனால் கன்னியாகுமரியின் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. அந்த கடைகளை உடனடியாக அகற்றும்படி உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, கோவிலுக்கு சொந்தமான இடத்தில் உள்ள அனைத்து கடைகளையும் கடந்த ஜனவரி 29-ந் தேதிக்குள் அகற்ற உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கன்னியாகுமரி சுனாமி பூங்கா அருகில் தரை வாடகை கடை வைத்து வியாபாரம் செய்து வரும் தமிழ்செல்வம், வரீது உள்பட 24 பேர் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். அதில், மாதந்தோறும் தரை வாடகையை கோவில் அலுவலகத்தில் செலுத்துவதாகவும், ஐகோர்ட்டு உத்தரவை கூறி எங்களை அப்புறப்படுத்தும் முயற்சியில் அறநிலையத்துறை ஈடுபடுவது ஏற்புடையதல்ல என்றும் கூறியிருந்தனர்.

இந்த மனுக்கள் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிவில், இந்த விவகாரத்தில் ஏற்கனவே ஐகோர்ட்டின் இரு நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த உத்தரவு, அங்கு உள்ள நிரந்தர கட்டுமானங்களில் செயல்பட்ட கடைகளுக்கு மட்டுமே பொருந்தும். காலி இடத்தில் வியாபாரம் செய்து வரும் மனுதாரர்கள் 24 பேரின் கடைகளை கட்டுப்படுத்தாது. மனுதாரர்களின் நலனை இரு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு எந்த வகையிலும் பாதிக்காது என்று நீதிபதி அறிவுறுத்தி, இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.