தமிழக செய்திகள்

நேபாளத்தில் சிக்கியவர்களை மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?- மத்திய, மாநில அரசுகள் அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு!

சென்னை ஐகோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி சிவஞானம் உள்ளிட்டோர் காணாமல் போயுள்ளனர்.

நேபாள வெள்ளத்தில் சிக்கி காணாமல் போனவர்களை மீட்க எடுத்த நடவடிக்கை குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய மத்திய, மாநில அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

கும்பகோணத்தைச் சேர்ந்த சூப்பர் யாத்ரா டிராவல்ஸ் என்ற தனியார் பயண நிறுவனம் மூலம் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 57 பேர் ஆகஸ்ட் 23-ந்தேதி கும்பகோணத்தில் இருந்து நேபாளத்திற்கு சென்றனர்.

ஆகஸ்ட் 26-ந்தேதி நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கியுள்ளனர். இவர்களில் சென்னை ஐகோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி சிவஞானம் உள்ளிட்டோர் காணாமல் போயுள்ளனர்.

நேபாளம் சென்ற தமிழகத்தைச் சேர்ந்த 57 பேரில் மீட்கப்பட்டவர்கள், சிகிச்சை பெற்று வருபவர்கள், காணாமல் போனவர்கள் குறித்த விபரங்களை, அவர்களின் குடும்பத்தினருக்கு தெரிவிக்க உத்தரவிட வேண்டும்.

மீட்பு நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள உத்தரவிட வேண்டும் எனக் கோரி திண்டுக்கல்லைச் சேர்ந்த வக்கீல் பர்வேஷ் முஷ்ரப், ஐகோர்ட்டு மதுரை அமர்வில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு, சென்னை ஐகோர்ட்டுக்கு மாற்றப்பட்டு, தலைமை நீதிபதி தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண், தமிழகத்தில் இருந்து கைலாசத்துக்கு யாத்திரை சென்ற 305 பேரில், 220 பேர் மீட்கப்பட்டு, அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

மீதமுள்ள 85 பேரை மீட்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஓய்வுபெற்ற நீதிபதி சிவஞானம் உள்பட காணாமல் போனவர்களின் குடும்பத்தினர், அரசு செலவில் காத்மாண்டு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்தார்.

இதையடுத்து, நேபாள வெள்ளத்தில் சிக்கி, காணாமல் போனவர்களை மீட்க எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி, மத்திய - மாநில அரசுகளுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்துள்ளனர்.