பல ஆண்டுகளாகக் கட்டமைக்கப்பட்ட “சிறை சென்ற தியாகி” என்ற போலி பிம்பம் உடைந்ததில் பதற்றம் பற்றிக்கொண்டதோ? என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட வீடியோவை விமர்சித்து தவெக ஐடி விங் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில், வீட்ல என்னை meet பண்ணப்ப சொன்னதை மறந்துட்டீங்களா தம்பி விஜய்? என்று பதிவிட்டு வீடியோ வெளியிட்டு உள்ளார். அதில்,
மிசா காலத்தில் கைது செய்யப்பட்டபோது சிறையில் எங்களுக்கு பல கொடுமைகள் நடந்தது.
காவலர்கள் தாக்கியதில் எனது அருமை அண்ணன் சிட்டிபாபு இறந்தார். அவர்கள் தாக்கியதில் எனது தாடை எலும்பு உடைந்தது.
எதிர்த்து போராடுவதும் அதன் விளைவுகளை சந்திப்பதும் எங்களுக்கு புதியது அல்ல.
யார் என்னை கொச்சைப்படுத்தினாலும் வரலாற்றை மாற்ற முடியாது.
உங்களுக்கு சந்தேகம் இருந்தால் சட்டசபையில் உள்ள நூலகத்திற்கு சென்று எனது போராட்ட வரலாற்றை படித்து பாருங்கள்.
சர்காரியாக கமிஷன் பற்றியும் தலைவர் கலைஞர் பற்றியும் தவறான தகவலை முதலமைச்சர் விஜய் கூறி உள்ளார்.
அரசியலுக்காக காழ்ப்புணர்ச்சி கொண்டவர்கள் சொன்ன பொய்யான குற்றச்சாட்டையும் முதலமைச்சர் விஜயும் கூறி உள்ளார்.
அமலாக்கத்துறை குற்றம்சாட்டிய 95% வழக்குகளில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாமல் குற்றம்சாட்டப்பட்டோர் விடுவிக்கப்பட்டனர்.
பெரும்பாலும் அரசியல் பழிவாங்கலுக்காகவே அமலாக்கத்துறை ஏவப்படுவது இங்கு உள்ள எல்லாருக்குமே தெரியும்.
தேர்தல் பிரசாரத்தின்போது கடுமையாக விமர்சித்ததற்கு சாரி என்று என்னிடம் கூறினீர்களே?
பரவாயில்லை தம்பி. நீங்க இப்போ மாநிலத்தின் முதலமைச்சர். யாரைப்பற்றியும் பேசும்போது கண்ணியத்தோடு பேசுங்கள் என்று சொன்னேன். அதையெல்லாம் மறந்துட்டீங்களே.
தமிழ்நாடு சட்டசபைக்கென ஒரு மாண்பும் மரியாதையும் இருக்கிறது. முதலமைச்சர் விஜய் தமிழ்நாடு சட்டசபையில் தேவையில்லாத சர்ச்சைகளை பேச வேண்டாம்.
தவெக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு படுகுழியில் இருக்கிறது. வீட்ல என்னை meet பண்ணப்ப சொன்னதை மறந்துட்டீங்களா தம்பி விஜய்?
தேர்தல் வாக்குறுதிகள் பலவற்றை பற்றி வாய் திறக்காமல் இருப்பது ஏன்? விதவிதமான ரீல்ஸ் போட்டு ஒரு தலைமுறையையே வீணாக்கி வருகிறீர்கள்.
வாக்களிக்கவில்லை என்பதற்காக மக்களை திமுகவினர் கைவிட்டு விடக்கூடாது.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
தவெக ஐடி விங் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
பல ஆண்டுகளாகக் கட்டமைக்கப்பட்ட “சிறை சென்ற தியாகி” என்ற போலி பிம்பம் உடைந்ததில் பதற்றம் பற்றிக்கொண்டதோ?
எதை உலகறியக் கூடாது என்று மஞ்சள் துண்டு தந்தை முதல் ஆபாசநதி மகன் வரை கட்டி அடைகாத்தார்களோ, அது அம்பலமானதில் அச்சம் அதிகமாகியிருக்கிறது. அத்தனை நீளமாகப் பேசியும் detention copy பற்றி மட்டும் மூச்சுவிடவில்லை.
உண்மைக்கு விளம்பரங்களோ, விளக்கங்களோ தேவையில்லை. ஆனால் இங்கே shooting video வெளியாகிறது என்றால், போலி பிம்பம் உடைந்தது உண்மையாகிறது.
பல cut-கள், உணர்வற்ற பேச்சு, மீண்டும் உண்மைக்கு மாறான ஒன்றை நம்ப வைக்க முயலும் படுதோல்வி முயற்சியாகவே தெரிகின்றன.
கட்டுமரக் கதைகளாலும் கட்டுக்கதைகளாலும் கட்டமைக்கப்பட்ட பொய்ப் பிம்பம், மெய்யைத் தாக்குப்பிடிக்காது என்பதை நிரூபித்திருக்கிறது இன்று வெளியான பொய் போராளியின் காணொளி.
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.