இன்ஸ்டாகிராம் நண்பரை நம்பி ரஷியாவுக்கு மருத்துவம் படிக்க சென்றவர் ராணுவத்தில் சேர்த்து விடப்பட்டுள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள கஞ்சநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சேதுராஜ். கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி லலிதா என்ற மனைவியும், விக்னேஷ் (வயது 32), அபினேஷ் குமார் (28) என்ற இரண்டு மகன்களும் உள்ளனர். அவர்கள் இருவரும் பட்டப்படிப்பு படித்துள்ளனர்.
இதில் அபினேஷ் குமாருக்கு இன்ஸ்டாகிராம், முகநூல் போன்ற சமூக வலைதள பக்கங்களில் அதிக ஆர்வம் உண்டு. அதன் மூலம் ஏராளமான நண்பர்களை சேர்த்து வைத்திருந்தார். அந்த வகையில், பகிரதன் என்பவர் நெருங்கிய நண்பராக கடந்த சில மாதங்களாக இருந்து வந்துள்ளார்.
இதற்கிடையே சமீபத்தில் அவர் அறிவியலை ஒரு பாடமாக படித்திருந்தால் போதும், ரஷ்யாவில் மருத்துவ படிப்புக்கு சேர விண்ணப்பிக்கலாம் என்றும், அதற்காக தான் ஏஜெண்டாக செயல்படுவதாகவும் பகிரதன் பொதுவான ஒரு தகவலை தெரிவித்து இருந்தார். இதைப் பார்த்த அபினேஷ் குமாருக்கு மருத்துவம் படிக்கும் ஆர்வம் வந்தது.
மேலும் இன்ஸ்டாகிராமில் அவரது நண்பர் அனுப்பியிருந்த விளம்பரத்தை அபினேஷ் குமார் தனது பெற்றோரிடமும் கூறினார். அவர்களும் மகனின் ஆசையை நிறைவேற்ற தயாராகினர். இதையடுத்து அபினேஷ் குமார் ரஷியாவில் மருத்துவம் படிப்பதற்கு விண்ணப்பித்து தனது நண்பர் மூலம் கடந்த ஏப்ரல் மாதம் 13-ந்தேதி மாணவர் விசா எடுத்து ரஷியாவிற்கு மருத்துவ படிக்க சென்றுள்ளார்.
மூன்று மாதங்கள் வரை குடும்பத்தாருடன் பேசி வந்த நிலையில் அதன் பின்னர் எந்தவித தொடர்பும் இல்லாமல் போனதால் அபினேஷ் குமாரின் பெற்றோர் கவலை அடைந்தனர். பல்வேறு இடங்களில் பேசி தன்னுடையை மகனின் நிலை குறித்து கேட்டு வந்தனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரஷியா ராணுவத்தில் தான் வலுக்கட்டாயமாக சேர்க்கப்பட்டது குறித்து அபினேஷ் குமார் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வந்துள்ளது. இதற்கிடையே மருத்துவ படிப்புக்கு ரஷியா சென்ற என் மகன் அங்கு ராணுவத்தில் சேர்த்து விடப்பட்டதாக அவருடைய நண்பர்கள் கூறுகின்றனர். என் மகனை என்னால் தொடர்பு கொள்ள முடியவில்லை.
அவரை தமிழக முதல்வர் மீட்டுத் தர வேண்டும் என அவரது தாய் லலிதா தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். ரஷியா-உக்ரைன் இடையே 2 ஆண்டுகளுக்கும் மேலாக போர் நடந்து வரும் நிலையில் ஏராளமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.
உக்ரைன் மற்றும் ரஷியாவிற்கு படிக்க சென்றவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.
இதற்கிடையே அவ்வாறு படிக்கவும், வேலைக்காகவும் சென்றவர்கள் ரஷியாவின் ராணுவத்தில் சேர்த்து விடப்படுவதாக தகவல் வந்தது.
இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு பலரை மீட்டு இந்தியாவுக்கு அழைத்து வந்தது. இந்தநிலையில் இன்ஸ்டாகிராம் நண்பரை நம்பி ரஷியாவுக்கு மருத்துவம் படிக்க சென்றவர் ராணுவத்தில் சேர்த்து விடப்பட்டுள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.