போதை ஆசாமியிடம் இருந்து மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை தெரு நாய்கள் போராடி காப்பாற்றிய சம்பவம் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார், இதுதொடர்பாக விசாரணை நடத்தினர்.
கோவை என்.ஜி.ஜி.ஓ. காலனி அசோகபுரம் பகுதியில் ஒரு பெட்டிக்கடைக்கு மர்ம நபர்கள் தீ வைத்ததாக துடியலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
தகவலின்பேரில் போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். இதன் ஒருபகுதியாக அந்த பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.
பெட்டிக்கடை தீ வைப்பு சம்பவத்தையும் தாண்டி அதிர்ச்சி தரும் வேறு ஒரு கொடூர சம்பவம் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது தெரிய வந்தது. அதுபற்றிய விவரம் வருமாறு:-
கோவை அசோகபுரம் ரெயில்வே மேம்பால சாலையோரம் அதே பகுதியை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் அமர்ந்து உள்ளார். அப்போது அந்த வழியாக கஞ்சா-மதுபோதையுடன் ஒருவர் வருகிறார். அவரை பார்த்ததும் அங்கு நின்றிருந்த 2 நாய்கள் இடைவிடாமல் தொடர்ந்து குரைத்தன.
இதனால் ஆத்திரமடைந்த நபர் அந்த பெண்ணிடம், "இது உங்களின் நாயா? எனக்கு பின்னால் வந்து கொண்டு உள்ளது" என்று கேட்டார். அதற்கு அந்த பெண், "கல்லை எடுத்து அடியுங்கள். நாய்கள் ஓடிவிடும். இந்த விஷயம் கூட உங்களுக்கு தெரியாதா?" என்று கூறினார்.
இதனை கேட்டு அந்த நபரும் உடனடியாக கல்லை எடுத்து வீசினார். தொடர்ந்து அந்த நாய்கள் சில அடி தூரம் ஓடி சென்றுவிட்டன. இருந்தபோதிலும் அந்த நாய்கள் மீண்டும் அந்த நபரை பார்த்து குரைத்து கொண்டே நின்றன.
அந்த நேரத்தில் போதை தலைக்கேறிய நிலையில் இருந்த நபருக்கு, சாலையோரம் தனியாக இருந்த மனநலம் பாதித்த பெண்ணை பார்த்ததும் சபலம் ஏற்பட்டது. இதனால் அவன் அந்த பெண்ணை திடீரென கற்பழிக்க முயன்றான்.
எனவே அதிர்ச்சி அடைந்த பெண், காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று கூச்சலிட்டார். அப்போது அங்கு யாரும் இல்லை என்பதால் உதவிக்கு யாரும் வரவில்லை.
இந்த நிலையில் மனநலம் பாதித்த பெண்ணிடம் போதையில் இருந்த நபர் அத்துமீறுவதை பார்த்த தெருநாய்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு ஓடோடி வந்தன. பின்னர் அந்த நபரை சுற்றி வளைத்து குரைத்தபடி இருந்தன.
மேலும் அந்த பெண்ணிடம் அத்துமீற முயன்றவரின் கால்களை அந்த நாய்கள் கடித்து இழுத்து, பாதிக்கப்பட்ட பெண்ணை நெருங்க விடாமல் தடுத்தன. தெரு நாய்களின் தொடர் தாக்குதலால் நிலைகுலைந்து
போன அந்த நபர் உடனடியாக கற்பழிப்பு முயற்சியை கைவிட்டு அந்த பெண்ணிடம் அங்கு விலகியதுடன், தப்பித்தால் போதும் என்று ஓட்டம் பிடித்தான். இருப்பினும் அந்த நாய்கள் பலாத்காரம் செய்ய முயன்ற நபரை பின்தொடர்ந்து துரத்தி சென்றன.
அசோகபுரம் மேம்பாலத்தில் கற்பழிக்க முயன்ற நபரிடம் இருந்து மனநலம் பாதித்த பெண்ணை தெரு நாய்கள் காப்பாற்றிய காட்சி, சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த துடியலூர் போலீசார், அந்த கேமராவில் பதிவாகி இருந்த நபர் தொடர்பாக விசாரணை நடத்தினர்.
போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் மனநலம் பாதித்த பெண்ணிடம் அத்துமீற முயன்றது, கணேஷ் நகர் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன் என்பதும், அசோகபுரம் மேம்பாலத்தில் தனியாக இருந்த மனநலம் பாதித்த பெண்ணை மதுபோதையில் பலாத்காரம் செய்ய முயன்றதும் தெரிய வந்தது. தொடர்ந்து அந்த சிறுவனை போலீசார் கைது செய்து அவனை கோவை சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் ஒப்படைத்தனர்.
கோவை துடியலூர் அருகே போதை ஆசாமியிடம் இருந்து மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை தெரு நாய்கள் போராடி காப்பாற்றிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.