தமிழக செய்திகள்

11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு துணைத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு!

ஜூன் 29 முதல் துணைத்தேர்வுகள் தொடங்கி ஜூலை 16 வரை நடைபெற உள்ளது.

தமிழ்நாட்டில் 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான துணைத்தேர்வு ஹால் டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டுள்ளன. மாணவர்கள் நாளைமுதல் https://www.dge.tn.gov.in/ என்ற இணையதளம் வாயிலாக தங்களது நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;

“நடைபெறவுள்ள ஜூன்/ஜூலை 2026, மேல்நிலை இரண்டாமாண்டு / மேல்நிலை முதலாமாண்டு துணைத் தேர்வெழுத விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் (தக்கல் உட்பட) தங்களது தேர்வுக்கான நுழைவுச் சீட்டுகளை 23.06.2026 (செவ்வாய்க் கிழமை) அன்று பிற்பகல் முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தனித்தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்குச் சென்று முதலில் HALL TICKET" என்ற வாசகத்தினை Click செய்தால் தோன்றும் பக்கத்தில் உள்ள "HSE SUPPLEMENTARY EXAM, JUNE/JULY 2026 - HALL TICKET DOWNLOAD என்ற வாசகத்தினை Click செய்து தோன்றும் பக்கத்தில் தங்களது விண்ணப்ப எண் (Application Number) அல்லது நிரந்தரப் பதிவெண் (Permanent Register No.) மற்றும் பிறந்த தேதியினை (Date of Birth) பதிவு செய்து, அவர்களுடைய தேர்வுக் கூட நுழைவுச் சீட்டைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

செய்முறைத் தேர்வுக்கான தேதி குறித்த விவரத்தைத் தனித்தேர்வர்கள் தமக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தேர்வு மையத்தின் முதன்மைக் கண்காணிப்பாளரை அணுகி அறிந்து கொள்ள வேண்டும். உரியத் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டின்றி எந்த ஒரு தேர்வரும் தேர்வெழுத அனுமதிக்கப்படமாட்டார்கள்.

தேர்வர்கள் நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்தபின் தாங்கள் எழுத வேண்டிய பாடங்கள் மற்றும் தேர்வு நாட்களை சரிபார்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

நுழைவுச் சீட்டு பதிவிறக்கம் செய்வது தொடர்பான சந்தேகங்களுக்கு 9498383075/9498383076 என்ற கைப்பேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

12ம் வகுப்பு மாணவர்களுக்கான துணைத்தேர்வுகள் வரும் ஜூன் 29-ஆம் தேதி தொடங்கி ஜூலை 7 வரை நடைபெற உள்ளன. இதனைத் தொடர்ந்து, 11ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் ஜூலை 8-ஆம் தேதி முதல் ஜூலை 16 வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.