அரையாண்டு தேர்வு வருகிற 14-ந்தேதி தொடங்கி 22-ந்தேதி வரை நடத்தப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
1 முதல் பிளஸ்-2 வரையிலான வகுப்புகளுக்கு அரையாண்டுத் தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டிருக்கிறது. அடுத்த மாதம் (டிசம்பர்) 14-ந்தேதி தேர்வு தொடங்குகிறது.
1-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் அரையாண்டு தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. தேர்வுக்கு மாணவ-மாணவிகள் தயாராக ஏதுவாக முன்கூட்டியே தேர்வு அட்டவணை வெளியிடப்படுவது வழக்கம். அந்த வகையில் அரையாண்டுத் தேர்வுக்கான அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டு இருக்கிறது.
இதுதொடர்பாக பள்ளிக் கல்வி, தொடக்கக் கல்வி, தனியார் பள்ளிகள் இயக்குனர்கள் கூட்டாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் அரையாண்டுத் தேர்வு வருகிற 14-ந்தேதி (திங்கட்கிழமை) தொடங்கி 22-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) வரை நடத்தப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 1, 2, 3 மற்றும் 6-ம் வகுப்புகளுக்கு காலை 10 மணி முதல் பிற்பகல் 12 மணி வரையிலும், 4, 5 மற்றும் 7-ம் வகுப்புகளுக்கு பிற்பகல் 2 மணி முதல் 4 மணி வரையிலும், 8, 9-ம் வகுப்புகளுக்கு பிற்பகல் 2 மணி முதல் 4.30 மணி வரையிலும், எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 வகுப்புகளுக்கு காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையிலும், பிளஸ்-1 வகுப்புக்கு பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தேர்வுக்கும் இடைவெளி எதுவும் இல்லாமல் தொடர்ச்சியாக நடத்தப்பட இருக்கிறது.
அரையாண்டுத் தேர்வு 22-ந்தேதியுடன் நிறைவு பெற்றாலும், 23-ந்தேதி (புதன்கிழமை) பள்ளிகள் செயல்படும் எனவும். அன்றைய தினம் வேலை நாளாக கணக்கில் கொள்ளப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து 24-ந்தேதி (வியாழக்கிழமை) முதல் அடுத்த ஆண்டு (2027) ஜனவரி 3-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரையிலான 11 நாட்கள் அனைத்து மாணவ- மாணவிகளுக்கும் அரையாண்டு விடுமுறை விடப்படுகிறது. விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் எதுவும் நடத்தக்கூடாது. விடுமுறை முடிந்து ஜனவரி 4-ந்தேதி (திங்கட்கிழமை) அனைத்து வகை பள்ளிகளும் திறக்கப்படும்.
பள்ளிகள் திறக்கும் நாளன்று 1 முதல் 7-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு 3-ம் பருவ புத்தகங்கள் வழங்கப்பட வேண்டும். மாணவர்களுக்கு திருத்தப்பட்ட விடைத்தாள்களை வழங்கி உரிய பதிவேடுகளில் மதிப்பெண்ணை பதிவு செய்திட அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்க முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டிருக்கிறது.