போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அஜித்குமார் தலைமையிலான போலீசார் வின்சென்ட் பவுல்ராஜ் வீட்டிற்கு சென்று சோதனை மேற்கொண்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் மைக்கேல்புரத்தை சேர்ந்த அந்தோணி எலியாஸ் மகன் வின்சென்ட் பவுல்ராஜ் (22) என்பவரது வீட்டில் நாட்டு துப்பாக்கிகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வடபொன்பரப்பி போலீஸ் நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அஜித்குமார் தலைமையிலான போலீசார் வின்சென்ட் பவுல்ராஜ் வீட்டிற்கு சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு 2 நாட்டு துப்பாக்கிகள் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து, துப்பாக்கிகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், சவேரியார்பாளையத்தை சேர்ந்த செல்வம் மகன் லிவிங்சன் (26) என்பவருடன் சேர்ந்து இரவு நேரங்களில் பறவைகள் மற்றும் முயல்களை வேட்டையாட செல்வதாக வின்சென்ட் பவுல்ராஜ் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து, லிவிங்சன் பதுக்கி வைத்திருந்ததாக கூறப்படும் மேலும் ஒரு நாட்டு துப்பாக்கியை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள லிவிங்சனை போலீசார் தேடி வருகின்றனர்.