கிண்டி சிறுவர் பூங்காவில் நீர்வாழ் பறவைகள் திடீரென இறந்ததால், பாதுகாப்பு நடவடிக்கையாக பூங்கா 28.11.2026 முதல் 30.11.2026 வரை மூடப்படும் என நிர்வாகம் அறிவித்துள்ளது. பறவைகளின் மரணத்திற்கான காரணம் கண்டறியப்படவில்லை, மாதிரிகள் ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளன.
கிண்டி சிறுவர் பூங்காவில் ஏராளமான பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் இங்குள்ள நீர்வாழ்பறவைகள் திடீரென இறந்தன.
இதையடுத்து பாதுகாப்பு முன்ஏற்பாடாக கிண்டி சிறுவர் பூங்கா நாளை முதல் (28-ந்தேதி) வருகிற 30-ந்தேதி வரை 3 நாட்கள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கிண்டி பூங்கா நிர்வாகம் வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை, கிண்டி சிறுவர் பூங்காவில் உள்ள நீர் வாழ் பறவைகள் அடைப்பிடத்தில் இன்று 27.11.2026 சில பறவைகள் உயிரிழந்து உள்ளன.
பறவைகளின் உயிரிழப்புக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. பரிசோதனைக்காக மாதிரிகள் போபாலில் உள்ள தேசிய உயர் பாதுகாப்பு விலங்கு நோய்கள் ஆய்வு நிறுவனத்திற்கு அனுப்பப்பட உள்ளன. பறவைக் காய்ச்சல் தொற்று இதுவரை உறுதி செய்யப்படவில்லை. இருப்பினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கிண்டி சிறுவர் பூங்கா 28.11.2026 முதல் 30.11.2026 வரை 3 நாட்களுக்கு அல்லது மறு உத்தரவு வரும் வரை மூடப்படும். அரசின் வழிகாட்டுதல்களின்படி, பாதிக்கப்பட்ட அடைப்பிடத்தைத் தனிமைப்படுத்துதல், கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்தல், தூய்மைப்படுத்துதல் மற்றும் உயிரிப் பாதுகாப்பு நடைமுறைகளைத் தீவிரமாகச் செயல்படுத்துதல் உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பூங்காவில் உள்ள பிற பறவைகள் மற்றும் விலங்குகளின் உடல்நிலை தொடர்ந்து தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.