பெண்ணை கொலை செய்து சூட்கேசில் அடைத்து ரெயிலில் அனுப்பி வைத்ததுடன் உடல் சதையையும் தனியாக துண்டித்தன் மூலம் நிச்சயம் நம்மை போலீசார் கண்டுபிடிக்க மாட்டார்கள் என்றே எண்ணி இருந்துள்ளனர். ஆனால் கூடுவாஞ்சேரி போலீசார் அதிரடியாக விசாரணை நடத்தி துப்பு துலக்கி கொலையாளிகள் இருவரையும் கைது செய்து சாதித்து காட்டி இருக்கிறார்கள்.
சென்னை கூடுவாஞ்சேரி மசூதி தெருவில் ஒடிசாவை சேர்ந்த ஹயாத் நிஷா என்ற பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கள்ளக்காதல் விவகாரம் காரணமாக அசாமை சேர்ந்த ராகுல் அவரது மனைவி பகவதி மாஜி ஆகியோர் இந்த கொடூர கொலையை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
கடந்த மாதம் ஹயாத் நிஷாவை கூடுவாஞ்சேரியில் உள்ள வீட்டில் வைத்து கொலை செய்த பிறகு உடலை துண்டு துண்டாக வெட்டியதுடன் தலையையும் துண்டித்து அடையாளம் தெரியாத அளவுக்கு சிதைத்து சூட்கேசில் அடைத்து சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஆக்ராவுக்கு அனுப்பி வைத்ததும் தெரிய வந்தது.
இது தொடர்பாக ஆக்ரா போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்திய நிலையில் கூடுவாஞ்சேரி போலீசார் கொலையாளிகள் இருவரையும் கைது செய்ய அதிரடி நடவடிக்கை எடுத்தனர்.
இதை தொடர்ந்து ராகுல், பகவதி மாஜி இருவரையும் மணிப்பூரில் வைத்து போலீசார் கைது செய்தனர். இருவரும் சென்னைக்கு அழைத்து வரப்பட்டு அவர்களிடம் அதிரடி விசாரணை நடத்தப்பட்டது.
போலீஸ் விசாரணையில் இந்த கொலை தொடர்பான பரபரப்பான புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன் விவரம் வருமாறு:-
கொலையுண்ட ஹயாத் நிஷாவுக்கு முறைப்படி ஒடிசா மாநிலத்தில் பெற்றோர்கள் பார்த்து வைத்த மாப்பிள்ளையுடன் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று உள்ளது. முதல் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஹயாத் நிஷா அவரை பிரிந்துள்ளார்.
இதன் பிறகு தான் அதே ஊரைச் சேர்ந்த வேறு ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர் ஒடிசாவில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார். 2-வது கணவருடன் ஒன்றாக ஒடிசாவில் குடும்பம் நடத்திய நிலையில் அவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு ஹயாத் நிஷா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்துள்ளார்.
இதன் பின்னர் கூடுவாஞ்சேரிக்கு வந்து தனது 19 வயது மகனுடன் தங்கி இருந்துள்ளார். மகன் ஏ.சி. மெக்கானிக்காக தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார்.
ஹயாத் நிஷாவும் அங்குள்ள நிறுவனம் ஒன்றில் வேலை செய்துள்ளார். அப்போதுதான் 3-வதாக அவருக்கு ராகுலுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் நெருங்கி பழகினார்கள். இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதை தொடர்ந்து சென்னையில் பல இடங்களில் இருவரும் ஒன்றாக சுற்றி திரிந்துள்ளனர்.
ராகுல் மனைவிக்கு தெரியாமலேயே ஹயாத் நிஷாவுடனான காதலை வளர்த்து வந்துள்ளார். இருவரும் தனிமையில் பல முறை சந்தித்து பேசியதின் விளைவாக ஹயாத் நிஷா கர்ப்பமானார்.
இதை தொடர்ந்து அவர் ராகுலிடம் தன்னை திருமணம் செய்துக்கொள்ளுமாறு வற்புறுத்தி இருக்கிறார். ஆனால் ராகுலோ எனக்கு திருமணமாகி நான் மனைவியுடன் வசித்து வரும் நிலையில் உன்னை திருமணம் செய்து கொள்ள முடியாது என்று மறுத்து வந்துள்ளார்.
ஆனால் ஹயாத் நிஷா தனது வயிற்றில் வளரும் குழந்தைக்கு நீதான் தந்தை. எனவே அதற்கு பொறுப்பேற்று என்னை திருமணம் செய்துக்கொள்ளாவிட்டால் நடப்பதே வேறு என்று மிரட்டல் விடுத்து உள்ளார். இதனால் வேறு வழியின்றி ராகுல் தனது மனைவி பகவதி மாஜியிடம் நடந்த சம்பவத்தை தெரிவித்துள்ளார். இதன் பிறகு பகவதி மாஜியும் ஹயாத் நிஷாவை கண்டித்துள்ளார்.
எங்கள் குடும்ப வாழ்க்கையில் நீ தலையிடாதே. எங்களை நிம்மதியாக வாழ விடு என்று கூறியிருக்கிறார். ஆனால் ஹயாத் நிஷா அதையெல்லாம் காதில் வாங்கி கொள்ளாமல் தொடர்ந்து இருவருக்கும் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.
உங்கள் இருவருடன் ஒரே வீட்டில் கூட நான் தங்கி கொள்கிறேன் என்று ஹயாத் நிஷா கூறியுள்ளார். இப்படி தொடர்ந்து தொந்தரவு செய்ததால் அவரை கொலை செய்ய கணவன்-மனைவி இருவரும் முடிவு செய்தனர்.
இதன்படி கடந்த 3-ந்தேதி கூடுவாஞ்சேரியில் உள்ள வீட்டில் வைத்து சாப்பாட்டில் விஷம் கலந்து கொடுத்து ஹயாத் நிஷாவை ராகுலும், பகவதி மாஜியும் சேர்ந்து சத்தம் இல்லாமல் கொலை செய்துள்ளனர்.
இதற்காக கடைக்கு சென்று கத்தி, ரம்பம் ஆகியவற்றை புதிதாக வாங்கி உள்ளனர். அதை வைத்து தான் கொலை செய்த பிறகு ஹயாத் நிஷாவின் உடல் பாகங்களை துண்டு துண்டாக வெட்டி எடுத்து உள்ளனர்.
ரம்பத்தை வைத்து தலை மற்றும் கை,கால்களை துண்டித்து சூட்கேசில் அடைத்து இருக்கிறார்கள். கத்தியை வைத்து சதை பாகங்களை அறுத்துள்ளனர். இதற்காக யூடியூப் மூலம் வீடியோ காட்சிகளை இருவரும் போட்டு பார்த்து உள்ளனர்.
சூட்கேசில் எளிதாக உடல் பாகங்களை அடைப்பதற்காகவே சதை பகுதி முழுவதையும் வெட்டி எடுத்ததுடன் தலை முடியையும் வழித்து எடுத்து இருக்கிறார்கள். இதன் பின்னர் சதை பாகங்களை பெரிய அண்டாவில் போட்டு துர்நாற்றம் வீசாமல் இருப்பதற்காக அதில் வினிகர் உள்ளிட்ட திரவங்களை ஊற்றி உள்ளனர்.
யூடியூப் பார்த்து உடல் அழுகாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என வீடியோக்களை ராகுலும், பகவதி மாஜியும் தெரிந்து கொண்டனர். இப்படி பெண்ணை கொலை செய்து சூட்கேசில் அடைத்து ரெயிலில் அனுப்பி வைத்ததுடன் உடல் சதையையும் தனியாக துண்டித்தன் மூலம் நிச்சயம் நம்மை போலீசார் கண்டுபிடிக்க மாட்டார்கள் என்றே எண்ணி இருந்துள்ளனர்.
ஆனால் கூடுவாஞ்சேரி போலீசார் அதிரடியாக விசாரணை நடத்தி துப்பு துலக்கி கொலையாளிகள் இருவரையும் கைது செய்து சாதித்து காட்டி இருக்கிறார்கள்.