தமிழக செய்திகள்

கூடலூரில் 2 பேரை கடித்து கொன்ற புலி கூண்டில் சிக்கியது- பொதுமக்கள் நிம்மதி

புலியின் நடமாட்டத்தை கண்டறிய மொத்தம் 244 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன. தினமும் அந்த கேமராக்கள் பரிசோதிக்கப்பட்டன.

கூடலூர் அருகே காட்டுப் புலி ஊருக்குள் புகுந்து 2 பேரை அடித்துக் கொன்றது. கடந்த மாதம் 9-ந் தேதி ஓவேலி லாரஸ்டன் பகுதியில் பாலகிருஷ்ணன் என்பவரையும், 21-ந் தேதி ரவிச்சந்திரனையும் தாக்கிக் கொன்றது. இந்த ஆட்கொல்லி புலியை பிடிக்கக்கோரியும், அந்த பகுதி பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ரூ.10 லட்சம் நிதியுதவி

அதனைத் தொடர்ந்து, அங்குள்ள பொதுமக்கள் 50 பேர் சென்னை வந்து முதலமைச்சரிடம் முறையிட வந்தனர். வனத்துறை அமைச்சர் ஆர்.வீ.ரஞ்சித் குமாரிடம் புலியை பிடிக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டனர். சட்டசபையிலும் இந்த பிரச்சினை எழுப்பப்பட்டது. அத்துடன் புலி தாக்கியதில் மரணம் அடைந்த பாலகிருஷ்ணன் மற்றும் ரவிக்குமார் குடும்பத்திற்கு அரசு சார்பில் தலா 10 லட்சம் ரூபாய் வீதம் நிவாரண உதவி வழங்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து வனத்துறை அமைச்சர் ஆர்.வீ.ரஞ்சித் குமார் கூடலூருக்கு நேரில் சென்றபோது அந்த 2 குடும்பத்துக்கும் தனது சொந்த பணத்தில் இருந்து தலா ஒரு லட்சம் வீதம் வழங்கினார்.

புலியைப் பிடிக்க ஏற்பாடு

இதைத் தொடர்ந்து புலியை பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபடுமாறு முதலமைச்சர் விஜய் வனத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். வனத்துறை அமைச்சர் ஆர்.வீ.ரஞ்சித் குமார், வனத்துறையின் செயலாளர் காகர் லா உஷா, வனத்துறை எச்.ஓ.டி.உதயா, டோக்கரா, நீலகிரி மாவட்ட கலெக்டர், வனத்துறை அதிகாரிகள் ஏராளமானோர் கூடலூர் பகுதிக்கு சென்று புலியை பிடிக்கும் பணியை முடுக்கி விட்டனர்.

கேமராக்கள்

200-க்கும் மேற்பட்ட வன ஊழியர்கள் களத்தில் இறங்கி புலியை தேடும் பணியில் ஈடுபட்டனர். 3 அதிநவீன டிரோன் கேமராக்களை பறக்கவிட்டு புலியை தேடிக் கொண்டே இருந்தனர். புலியின் நடமாட்டத்தை கண்டறிய மொத்தம் 244 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன. தினமும் அந்த கேமராக்கள் பரிசோதிக்கப்பட்டன. முக்கியமான இடங்களில் 13 இரும்புக் கூண்டுகளை அமைத்து அதில் ஆடுகள் கட்டிவைக்கப்பட்டன.

புலி சிக்கியது

இந்தநிலையில் 28 நாட்களுக்கு பிறகு நேற்று இரவு ஆட்கொல்லி புலி கூண்டில் சிக்கிக்கொண்டது. கூடலூர் நகரைஒட்டிய கே.கே. நகர் பகுதியில் வைக்கப்பட்டிருந்த இரும்புக் கூண்டில் புலி மாட்டிக் கொண்டது.

வனத்துறை அதிகாரிகள்

அந்த புலி ஆண் புலியாகும். அதற்கு 9 வயது முதல் 10 வயதுக்குள் இருக்கும். கூண்டில் சிக்கிய புலியை வனத்துறையினர் இரவோடு, இரவாக முதுமலைக்கு கொண்டு சென்றனர். புலியை மைசூர் காப்பகத்துக்கு கொண்டு செல்வதா அல்லது சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு கொண்டு செல்வதா? என்ற வனத்துறை அதிகாரிகள் ஆலோசித்து வருகிறார்கள்.

SCROLL FOR NEXT