தமிழக செய்திகள்

கோடை வெப்பம் அதிகரிப்பால் சென்னையில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்தது

கடந்த ஏப்ரல் மாதத்தில் 5 மீட்டர் ஆழத்திற்கு நிலத்தடி நீர்மட்டம் இறங்கிவிட்டது.

சென்னையில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 100 டிகிரிக்கும் அதிகமாக வெயில் கொளுத்துவதால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருகிறது. கடந்த பிப்ரவரி மாதத்தில் 4.32 மீட்டராக இருந்த சராசரி நிலத்தடி நீர்மட்டம் மார்ச் மாதத்தில் 4.79 மீட்டர் ஆழத்திற்கு சென்றுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதத்தில் 5 மீட்டர் ஆழத்திற்கு நிலத்தடி நீர்மட்டம் இறங்கிவிட்டது. இதனால் திருவொற்றியூர், மாதவரம், திரு.வி.க. நகர், சோளிங்கநல்லூர், ராயபுரம், வியாசர்பாடி, ஆர்.கே.நகர் உள்ளிட்ட பல பகுதிகளில் ஆழ்துளை கிணறுகள் வறண்டு உப்பு தண்ணீர் அதிகரிக்க தொடங்கி உள்ளது.

இதனால் பொதுமக்கள் லாரி தண்ணீரை எதிர்பார்க்கத் தொடங்கியுள்ளனர். கடந்த ஒரு மாதமாக லாரி தண்ணீர் பயன்பாடு அதிகரித்து வருகிறது. 18ஆயிரம் லீட்டர், 12 ஆயிரம் லிட்டர் மற்றும் மினி லாரியின் மூலம் மெட்ரோ குடிநீர் நிலையத்தில் இருந்து டேங்கர் லாரிகளில் குடிநீர் வாங்குவது அதிகமாகி இருக்கிறது.

தினமும் குளிப்பதற்கு அல்லது துணி துவைப்பதற்குகூட பயன்படுத்த முடியாத அளவுக்கு உப்புநீர் வரத் தொடங்கி உள்ளதால் ராயபுரம் பகுதியை சேர்ந்த பலர் குடிநீர் லாரிகளை நம்பி இருக்கிறார்கள். நிலத்தடி நீர்மட்டம் வறண்டு வருவதால் கடல்நீர் ஊடுருவல் காரணமாக வடசென்னையில் உள்ள பல வீடுகளில் உப்புத் தன்மையுடன் கூடிய குடி நீர் வருவது அதிகமாக காணப்படுகிறது.

இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், சமைப்பதற்கும், குடிப்பதற்கும், பாத்திரங்கள் கழுவுவதற்கும் நாங்கள் டேங்கர் லாரி தண்ணீரை நம்பி இருக்க வேண்டி உள்ளது.

மெட்ரோ குடிநீர் கிடைத்தாலும் அதுபோதுமானதாக இல்லை. அதனால் குடிநீர் லாரியை நம்பியிருப்பதாக கூறினார்கள். சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், வீராணம் மற்றும் கண்ணன் கோட்டை தேர்வாய் கண்டிகை ஆகிய ஏரிகளில் 8 ஆயிரத்து 330.80 மில்லியன் தண்ணீர் இருப்பு உள்ளதால் சென்னைக்கு குடிநீர் தட்டுப்பாடு வராது என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

சென்னை மாநகரின் குடிநீர் தேவையை ஏரி தண்ணீர் மட்டுமின்றி கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தின் மூலமும் வினியோகம் செய்து வருகிறோம்.

தடையின்றி தண்ணீர் வினியோகம் செய்து வருவதால் மக்களுக்கு எந்த பாதிப்பும் கிடையாது. போர்வெல் மூலம் குடிநீர் பயன்படுத்தும் இடங்களில் தண்ணீர் வறண்ட காரணத்தால் அவர்களும் மெட்ரோ குடிநீரை அதிகம் பயன்படுத்த தொடங்கி உள்ளனர்.

முன்பதிவு செய்யும் பொதுமக்களுக்கும் லாரிகளில் தண்ணீரை அனுப்பி வருகிறோம் என்று தெரிவித்தனர்.