நீலகிரி மாவட்டத்தில் உறைபனியால் புல்வெளிகள் வெண்ணிறமாக மாறி, இயற்கை அழகை ரசிக்க சுற்றுலா பயணிகள் அதிகாலை நேரங்களில் ஆர்வத்துடன் வருகை தருகின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் குளிரின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ஊட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உறைபனி தொடங்கியுள்ளது.
இதனால் புல்வெளிகள், தேயிலைத் தோட்டங்கள் மற்றும் விவசாய தோட்டங்கள் வெண்பனி படர்ந்து ரம்மியமாக காட்சியளிக்கின்றன. ஊட்டியில் இன்று குறைந்தபட்ச வெப்பநிலை 5.9 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 13.6 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியுள்ளது. மழைப்பொழிவு எதுவும் பதிவாகவில்லை. குறிப்பாக, அதிகாலை நேரங்களில் ஊட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள புல்வெளிகள், தேயிலைத் தோட்டங்கள் மற்றும் விவசாய நிலங்களில் உறைபனி படர்ந்து காணப்படுகிறது. பசுமையாக காட்சியளிக்கும் புல்வெளிகள் வெண்ணிற போர்வை போர்த்தியது போன்று மாறியுள்ளதால், நீலகிரி மலை மாவட்டத்தின் இயற்கை அழகு மேலும் மெருகேறியுள்ளது.
ஊட்டிக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள், அதிகாலை நேரங்களில் புல்வெளிகளில் படர்ந்துள்ள வெண்பனியைக் கண்டு உற்சாகமடைந்து வருகின்றனர். குறிப்பாக, பனியால் வெண்ணிறமாக மாறியுள்ள புல்வெளிகளையும் இயற்கை காட்சிகளையும் சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் ரசித்து வருகின்றனர்.
ஒருபுறம் உறைபனி சுற்றுலா பயணிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும், மறுபுறம் தேயிலை விவசாயிகள் மற்றும் மலைக் காய்கறி சாகுபடியாளர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
வரும் நாட்களில் உறை பனியின் தாக்கம் அதிகரித்தால் தேயிலைச் செடிகள் மற்றும் மலைக் காய்கறிப் பயிர்கள் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக விவசாயிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.