தமிழக செய்திகள்

சேலத்தில் கிணற்றுக்குள் தூக்குப்போட்டு பாட்டி-பேத்தி தற்கொலை: வறுமையால் விபரீதம்

ராஜசேகர் குடும்ப செலவுக்கு பணம் கொடுக்காமல் குடித்து விட்டு ஊதாரியாக அலைந்துள்ளார். இதனால் சாப்பாட்டிற்கு வழியில்லாமல் அம்மணியும், சதாஸ்ரீயும் வறுமையில் வாடியதாக கூறப்படுகிறது.

சேலம் கன்னங்குறிச்சி கோவிந்தசாமி காலனியை சேர்ந்தவர் அம்மணி (வயது 60). இவரது மகன் ராஜா என்ற ராஜசேகர். இவரது மனைவி ஆரணி. இவர்களது மகள் மாற்றுத்திறனாளியான சதாஸ்ரீ (20), இவருக்கு சற்று மனநிலை பாதித்த நிலையில் இருந்தார்.

இந்த நிலையில் குடிப்பழக்கம் உள்ள ராஜசேகர் குடும்ப செலவிற்கு சரியாக பணம் கொடுக்காத நிலையில் அவரது மனைவி ஆரணி இவர்களை விட்டு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்று விட்டார். இதனால் மாற்றுத்திறனாளியான சதாஸ்ரீ தனது பாட்டி மற்றும் தந்தையின் பராமரிப்பில் இருந்து வந்தார்.

நேற்றிரவு 3 பேரும் வீட்டில் படுத்து தூங்கிய நிலையில் இன்று காலை மகள் மற்றும் தாயை காணாமல் ராஜசேகர் தேடினார். அப்போது வீட்டின் வளாகத்தில் உள்ள கிணற்றில் அம்மணியும், சதாஸ்ரீயும் சேலையில் தூக்குப்போட்ட நிலையில் தொங்கினர். இதனை பார்த்த ராஜசேகர் அதிர்ச்சி அடைந்து கத்தினார்.

போலீசார் விசாரணை நடத்திய போது சோகமான தகவல்கள் வெளியானது.

சதாஸ்ரீயின் தாய் ஆரணி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கணவர் மற்றும் மகளை பிரிந்து சென்ற நிலையில் பாட்டியான அம்மணி, பேத்தி மற்றும் தனது மகனை கவனித்து வந்தார். ஆனாலும் ராஜசேகர் குடும்ப செலவுக்கு பணம் கொடுக்காமல் குடித்து விட்டு ஊதாரியாக அலைந்துள்ளார். இதனால் சாப்பாட்டிற்கு வழியில்லாமல் அம்மணியும், சதாஸ்ரீயும் வறுமையில் வாடியதாக கூறப்படுகிறது.

இதனால் மனம் உடைந்த அம்மணி, பேத்தியுடன் தற்கொலை செய்ய முடிவு செய்துள்ளார். அதன்படி நேற்றிரவு கிணற்றில் மேல் பகுதியில் இருந்த விட்டத்தில் சேலையை கட்டி அதனை தனது பேத்தியின் கழுத்தில் கட்டி தூக்கில் தொங்க விட்டு கிணற்றில் தள்ளியுள்ளார்.

பின்னர் தானும் சேலையை கழுத்தில் கட்டி கிணற்றிற்குள் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.