முதலமைச்சர் விஜய்யின் சீரிய வழிகாட்டுதலின்படி தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்புகளை உருவாக்கி வருகிறது.
அந்த வகையில் ராமநாதபுரம் மாவட்டம் பிரப்பன் வலசை கிராமத்தில் ரூ.42 கோடியே 90 லட்சம் மதிப்பீட்டில் 7.18 ஏக்கர் பரப்பளவில் தமிழ்நாடு ஒலிம்பிக் நீர் விளையாட்டு அகாடமி கட்டப்பட்டுள்ளது.
இதனை முதலமைச்சர் விஜய் சென்னையில் நேற்று நடைபெற்ற முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டி நிறைவு விழாவில் காணொளி மூலம் திறந்து வைத்தார்.
நீர்விளையாட்டுகளுக்கான பயிற்சி வசதிகள் அனைத்தும் ஒரே குடையின் கீழ் கொண்டுவரும் முயற்சி என்ற தனிப்பெருமை இந்தியாவிலேயே இதற்கு மட்டுமே உரியது.
இதில் வீரர், வீராங்கனைகளுக்காக தலா 40 பேர் தங்கும் வகையிலான விடுதிகள் உள்ளன. பயிற்சியாளர்களுக்கென 10 அறைகளும் அமைக்கப்பட்டுள்ளன.
கடல்நோக்கி அமைந்த கட்டிடத்தின் பெரிய ஜன்னல்கள் மூலம் பயிற்சியாளர்கள் கரையில் இருந்தே வீரர்களை கண்காணிக்க முடியும். நவீன தொழில்நுட்ப வசதியுடன் கூடிய வகுப்பறைகளில் வீடியோ பகுப்பாய்வு மூலம் பயிற்சி மேம்படுத்தப்படும்.
ஜிம், யோகா அறை, பிசியோதெரபி வசதி, படகு நிறுத்தும் இடம், போட் ஹாங்கர், திறந்தவெளி ஓய்விடம் ஆகியவை இங்கே இடம்பெற்றுள்ளன.
செயிலிங், கேனேயிங், சர்பிங், கயாக்கிங், ஸ்டாண்டப் பேடில் போர்டிங் உள்ளிட்ட ஒலிம்பிக் நீர் விளையாட்டுகளுக்கு இங்கு உலகத்தரம் வாய்ந்த பயிற்சி அளிக்கப்படும்.
வாட்டர் போலோ, ஆர்ட்டிஸ்டிக் ஸ்விம்மிங் ரோயிங் ஆகியவற்றுக்கும் வசதிகள் உள்ளன. இந்த பகுதியின் காற்று மற்றும் அலைகளின் இயக்கம் நீர் விளையாட்டுகளுக்கு மிகவும் ஏற்றது.
கடலில் 5 கி.மீ.வரை ஆழம் குறைவாக இருப்பதால் தொடக்கநிலை பயிற்சிக்கு பாதுகாப்பான சூழல் கிடைக்கிறது.
6 மாதங்கள் அமைதியான கடல் நிலை நிலவுவதால் உள்நாட்டு, வெளிநாட்டு வீரர்கள் இங்கு பயிற்சி பெற வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் மூலம் உள்ளூர் இளைஞர்கள் மற்றும் மீனவர் சமூகத்தினருக்கு வேலைவாய்ப்புகளும் உருவாகும். இந்த அகாடமி சர்வதேச போட்டிகளை நடத்துவதற்கும் தயாராக உள்ளது.
இந்த பிரமாண்டமான அகாடமியை பிரபல கட்டிடக்கலை நிபுணர் கேஷுப் மணவாளன் திறம்பட வடிவமைத்து கட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பசுமை சூழ்ந்த இந்த அமைதியான சூழலில் வீரர்கள் ஒருமித்த கவனத்துடன் தங்கள் திறனை மெருகேற்றி அலைகளை வென்று உலக அரங்கில் தமிழ்நாட்டின் பெருமையை பறைசாற்றும் நாள் வெகு தொலைவில் இல்லை.
சுமார் 18 ஏக்கர் நிலப்பரப்பில் உருவாக்கப்பட்டுள்ள இந்த வளாகத்தில் 400 மீட்டர் தடகளப் பாதை, கால்பந்து, ஹாக்கி, கூடைப்பந்து, வாலிபால், டென்னிஸ் மைதானங்கள், ஸ்கேட்டிங் ரிங்க், கோ-கோ திடல், ஜிம்னாஸ்டிக்ஸ் அரங்கம், உடற்பயிற்சி கூடம், நீச்சல் குளம், உள்விளையாட்டு அரங்கம் ஆகியவை அடங்கும்.
இதேபோல் சேலம் மாவட்டம் கருப்பூரில் உள்ள அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட பல்நோக்கு விளையாட்டு வளாகத்தையும் முதலமைச்சர் விஜய் திறந்து வைத்தார்.
நிர்வாக அலுவலகம், விளையாட்டு விடுதி, கேபே போன்ற வசதிகளும் இங்கே உள்ளன. மாவட்ட இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் இதனைப் பயன்படுத்தி பயிற்சி பெறலாம். இந்த இரு திட்டங்களும் தமிழகத்தின் விளையாட்டு உள்கட்டமைப்பை மேம்படுத்தி ஒலிம்பிக் அளவிலான சாதனைகளை ஊக்குவிக்கும் நோக்கில் செயல்படுத்தப்பட்டுள்ளன.