தமிழக செய்திகள்

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய தலைவராக கு.ப.கிருஷ்ணன் நியமனம்!

சட்டமன்ற தேர்தலில் தவெக சார்பில் லால்குடி தொகுதியில் போட்டியிட்டார்.

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத் தலைவராக கு.பா. கிருஷ்ணனை நியமித்து, முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக அரசு தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,

“ஏழை எளிய மக்களின் வாழ்விடங்களின் மேம்பாட்டுக்காக உருவாக்கப்பட்ட தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் குடியிருப்புகளை உருவாக்குதல், உறைவிடங்களில் மறுகுடியமர்வு செய்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் இன்று தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் பல்வேறு நலத்திட்டங்களை மேற்கொள்வதற்கு, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் தலைவராக கு.பா. கிருஷ்ணனை நியமனம் செய்து ஆணையிட்டுள்ளார்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

யார் இந்த கு.ப.கிருஷ்ணன்?

அதிமுகவின் முன்னாள் அமைச்சரான கு.ப.கிருஷ்ணன், அக்கட்சியில் இருந்து விலகி 'தமிழர் பூமி' என்ற கட்சியைத் தொடங்கி, 2001 இல் திமுக கூட்டணியில் இணைந்தார். பின்னர் மீண்டும் அதிமுகவில் இணைந்த அவர், கட்சியில் பிளவு ஏற்பட்டபோது ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளராகச் செயல்பட்டார்.

ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைய, கடந்த ஜனவரியில் தவெகவில் இணைந்தார். சட்டமன்ற தேர்தலில் தவெக சார்பில் லால்குடி தொகுதியில் போட்டியிட்டார்.