சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட நர்சுகள். 
தமிழக செய்திகள்

பணி நிரந்தரம் செய்யக்கோரி அரசு நர்சுகள் போராட்டம்

கடந்த ஆட்சியில் பணி நிரந்தரம் செய்வதாக உறுதியளித்து விட்டு செய்யாமல் சென்றது போல இந்த அரசு செயல்பட வேண்டாம்.

முதலமைச்சர் விஜய் இந்த பிரச்சனையில் தலையிட்டு 9 ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் நர்சுகளை நிரந்தரமாக வேண்டும் என்று அதன் நிர்வாகிகள் வலியுறுத்தினர்.

பல்வேறு கட்ட போராட்டங்கள்

தமிழ்நாடு நர்சுகள் மேம்பாட்டு சங்கத்தின் சார்பில் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடந்து வருகின்றன.

அரசு மருத்துவமனைகள் ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் நர்சுகளை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்த போராட்டம் நடந்தது. சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ். வளாகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட நர்சுகள் இன்று காலை 7 மணிக்கு திரண்டனர்.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த அவர்களை போலீசார் டி. எம். எஸ். வளாகத்திற்குள் ஒரு பகுதியில் முடக்கி வைத்தனர். போராட்டம் காலை 11 மணிக்கு நடைபெறுவதாக அறிவித்திருந்த நிலையில் 7 மணிக்கெல்லாம் அவர்களை போலீசார் வெளியே விடாமல் வளாகத்திற்குள் வைத்திருந்தனர். இதனால் போலீசாருக்கும், நர்சுகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

கோஷங்கள்

த.வெ.க.வின் தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றும் வகையில் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் அனைத்து நர்சுகளையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.

முதலமைச்சர் விஜய் இந்த பிரச்சனையில் தலையிட்டு 9 ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் நர்சுகளை நிரந்தரமாக வேண்டும் என்று அதன் நிர்வாகிகள் வலியுறுத்தினர்.

இதுகுறித்து சங்கத்தின் நிர்வாகி சுர்ஜித் கூறியதாவது:-

நல்ல தீர்வு

6500 செவிலியர்கள் கடந்த 9 ஆண்டுகளாக குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வருகிறார்கள். அரசு மருத்துவமனைகளில் காலி பணியிடங்கள் ஆயிரக்கணக்கில் இருந்து வருகிறது. அவற்றை நிரப்பாமல் காலி பணியிடங்களை குறைக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டு வருகிறது. நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப பணியிடங்களை அதிகரிக்க வேண்டும். மாறாக பணியிடங்களை குறைப்பது நிரந்தரமாக்கப்படும் என்ற செவிலியரின் கனவுக்கு முற்றுப்புள்ளி வைப்பதாகும்.

எனவே செவிலியர்களுக்கு எதிராக மீள் பணி அமர்வு முடிவினை அரசு கைவிட வேண்டும். கடந்த ஆட்சியில் பணி நிரந்தரம் செய்வதாக உறுதியளித்து விட்டு செய்யாமல் சென்றது போல இந்த அரசு செயல்பட வேண்டாம். முதலமைச்சர் விஜய் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் இப்போராட்டம் நடத்தப்பட்டது. இந்த பிரச்சனைக்கு நல்ல தீர்வை விரைவில் காண வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.