சென்னையில் உள்ள 30 மாநகரப் போக்குவரத்து கழக பணிமனைகளில் இன்று அதிகாலை 5 மணி அளவில் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலைக்கு சென்ற பஸ் டிரைவர், கண்டக்டர்கள் பஸை வெளியே எடுக்காமல் நிறுத்தி வைத்து சிறிது நேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாநகர போக்குவரத்து கழகத்தில் காலியாக உள்ள டிரைவர், கண்டக்டர் மற்றும் தொழில்நுட்ப பணி இடங்களை விரைவாக நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டம் நடந்தது.
இதுகுறித்து சி.ஐ.டி.யு. தொழிற்சங்க நிர்வாகி தயானந்தம் கூறியதாவது:-
மாநகர போக்குவரத்து கழகத்தில் 10 ஆண்டுகளாக டிரைவர், கண்டக்டர்கள் எடுக்கப்படவில்லை. இதனால் தொழிலாளர்கள் எண்ணிக்கை குறைந்து உள்ளது. ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்களை தேர்வு செய்து இயக்கி வருகிறார்கள். இது பொது மக்களுக்கு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
தற்போது மாநகரப் போக்குவரத்து கழகத்தின் சார்பாக 3233 பஸ்களும் 625 மின்சார பஸ்களும் இயக்கப்படுகின்றன. டிரைவர், கண்டக்டர் இல்லாததால் முழுமையான அளவு பஸ்களை இயக்க முடியவில்லை. 3233 மாநகர பஸ்களில் 2900 பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகிறது. தினமும் 250 முதல் 300 பேருந்துகள் வரை இயக்க முடியாததால் பொதுமக்கள் கூட்ட நெரிசலில் பயணம் செய்யும் நிலை உள்ளது. இதனால் டிரைவர், கண்டக்டருக்கு கூடுதல் பணி சுமை ஏற்படுகிறது.
அரசு போக்குவரத்து கழகங்களில் மட்டும் 30 ஆயிரம் காலி பணியிடங்கள் இருக்கின்றன. இதில் சென்னையில் மட்டும் 8000 இடங்கள் காலியாக உள்ளன. இந்த இடங்களை ஒப்பந்த முறையில் இல்லாமல் நிரந்தரமாக நியமிக்க வேண்டும். கடந்த அரசுகள் செய்த தவறை இந்த அரசு செய்ய வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறினார்.