தமிழக செய்திகள்

பாக்யராஜ் மறைவு திரையுலகிற்கு பேரிழப்பு- கவர்னர் இரங்கல்

பாக்யராஜ் திரைப்பயணம் மற்றும் மரபு, பல தலைமுறை திரைப்படக் கலைஞர்களுக்கும், சினிமா ரசிகர்களுக்கும் தொடர்ந்து ஊக்கமளிக்கும்.

சென்னை:

பிரபல இயக்குநரும், நடிகருமான பாக்யராஜ் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது (73). பாக்யராஜ் மறைவுக்கு திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

" மூத்த தமிழ் திரைப்பட இயக்குநரும், எழுத்தாளருமான கே. பாக்யராஜ் மறைவு, திரையுலகிற்கு பேரிழப்பாகும்.

தனித்துவமான கதை சொல்லும் திறன், படைப்பாற்றல் மற்றும் தமிழ் சினிமாவிற்கு அவர் ஆற்றிய அளப்பரிய பங்களிப்பு, அவரை ரசிகர்களின் இதயங்களில் என்றும் நிலைத்திருக்கச் செய்துள்ளது. அவரது திரைப்பயணம் மற்றும் மரபு, பல தலைமுறை திரைப்படக் கலைஞர்களுக்கும், சினிமா ரசிகர்களுக்கும் தொடர்ந்து ஊக்கமளிக்கும்.

அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் எண்ணற்ற ரசிகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்" என்று கூறியுள்ளார்.