தமிழக செய்திகள்

டாஸ்மாக் ஊழியர்களுக்கு சம்பளத்தை உயர்த்த அரசு திட்டம்

டாஸ்மாக் நிறுவனம் ஒரு முன்மொழிவை தயாரித்து உள்ளது. விரைவில் இதன் மீது முடிவெடுக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

டாஸ்மாக் ஊழியர்கள் சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர். இவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற த.வெ.க. அரசு தற்போது ஆலோசித்து வருகிறது.

டாஸ்மாக் ஊழியர்களின் குறைகளை அமைச்சர் விக்னேஷ் கேட்டறிந்து வருகிறார்.

குறிப்பாக மதுபான பாட்டிலுக்கு வாடிக்கையாளரிடம் 10 ரூபாய் கூடுதலாக வாங்கக்கூடாது என்பதில் அரசு உறுதியாக இருப்பதாகவும், கடைகளின் செலவினங்களை டாஸ்மாக் நிறுவனம் ஏற்றுக்கொள்ளும் வகையில் பல்வேறு சீரமைப்புகள் நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக டாஸ்மாக் நிறுவனங்களில் பணிபுரியும் 23 ஆயிரம் ஊழியர்களின் சேவைகளை முறைப்படுத்தவும், அவர்களின் சம்பளத்தை உயர்த்தவும், ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்தவும் அரசு திட்டமிட்டுள்ளது.

முன்மொழிவு

இதற்காக டாஸ்மாக் நிறுவனம் ஒரு முன்மொழிவை தயாரித்து உள்ளது. விரைவில் இதன் மீது முடிவெடுக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த முன்மொழிவுக்கு ஒப்புதல் அளித்தால், விற்பனை நிலையங்களில் பணிபுரியும் டாஸ்மாக் ஊழியர்களின் 23 ஆண்டு கால எதிர்பார்ப்பு நிறைவேறிடும். டாஸ்மாக் கடைகளுக்கான செலவுகள், மின்சார கட்டணம், வாடகை போன்றவற்றை முறைப்படுத்துவதற்கான முயற்சிகளுக்கு பிறகு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

2003-ல் மதுபான விற்பனையை ஏற்றுக்கொண்ட பிறகு 35 ஆயிரம் பணியாளர்களை ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தியது. அவர்களின் தற்போதைய பணியாளர்களின் எண்ணிக்கை 23 ஆயிரம் ஆகும். தற்போது ஒரு கடை மேற்பார்வையாளருக்கு மாதத்திற்கு ரூ.17,850 சம்பளமும், விற்பனையாளர்களின் மாதச் சம்பளம் ரூ.15,530 ஆகும். உதவி விற்பனையாளர்களின் மாதச் சம்பளம் ரூ.14,340 ஆகும்.

வேலையின் நிரந்தரம், காலத்திற்கேற்ப சம்பளம், ஓய்வு பெறும் வயதை நீட்டித்தல் ஆகியவை பணியாளர்களின் முக்கிய கோரிக்கைகளாக இருந்தன. இவற்றை அடுத்தடுத்து வந்த அரசாங்கம் கவனத்தில் கொள்ளவில்லை.

த.வெ.க. அரசு

இப்போது முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசு டாஸ்மாக் ஊழியர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண முன்வந்து உள்ளது வரவேற்கத்தக்கது என்று பணியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.