தமிழக அரசின் அண்ணன் சீர் திட்டத்திற்கு நிர்வாக அனுமதியும், நிதி அனுமதியும் வழங்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
திருமணமாகும் மணப்பெண்களுக்கு அண்ணன் சீராக 8 கிராம் (22 காரட்) தங்க நாணயமும், ஒரு பட்டு புடவையும் வழங்கும் அண்ணன் சீர் திட்டத்தை தவெக தேர்தல் அறிக்கையில் வழங்கியிருந்தது.
தற்போது அதை நிறைவேற்றும் வகையில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக அரசு நடவடிக்கையை தொடங்கி உள்ளது.
ஏற்கனவே கடந்த பட்ஜெட் தொடரில் இத்திட்டத்திற்கு ரூ.813 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக சட்டமன்றத்தில் நிதியமைச்சர் மரிய வில்சன் அறிவித்திருந்தார். இந்நிலையில் அதற்கான அரசாணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
தற்போது வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் "அண்ணன் சீர் திட்டத்திற்காக முதற்கட்டமாக 812 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இணையவழி மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ள நிலையில் இதற்கான இணையதளம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும்" எனதெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
“தமிழகத்தில் திருமணம் நடைபெறும் மணப்பெண்களுக்கு, அரசின் சார்பில் “அண்ணன் சீர்” என்ற திட்டத்தின் கீழ் 8 கிராம் (22 காரட்) தங்க நாணயமும், ஒரு பட்டுப் புடவையும் வழங்குவதற்கான நிர்வாக மற்றும் நிதி அனுமதி வழங்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக இத்திட்டத்தை செயல்படுத்த ரூ.812 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான இணையதளம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும். திருமணம் என்பது ஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் மிக முக்கியமான மகிழ்ச்சியான தருணம்.
அந்தத் தருணத்தில், ஒரு அண்ணனாக அரசே உடனிருந்து மணப்பெண்ணுக்கு சீர்வரிசை வழங்கும் வகையில் இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
மகளிரின் நலனையும், குடும்பங்களின் திருமண செலவு சுமையையும் கருத்தில் கொண்டு “அண்ணன் சீர்” திட்டத்தை செயல்படுத்தும் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்க்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.