Anbumani condemns LPG Price Hike அன்புமணி ராமதாஸ்
தமிழக செய்திகள்

மேகதாது விவகாரத்தில் அரசு அலட்சியம்: அனைத்து கட்சி கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும்- டாக்டர் அன்புமணி வலியுறுத்தல்

தமிழக அரசின் அலட்சியம் காவிரி நீரில் தமிழகத்தின் உரிமையை தாரைவார்ப்பதாக அமைந்துவிடும்.

பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்படும் என்றும், மேகதாது அணையை கட்டுவதற்கான அனுமதி கோரி மத்திய அரசை கர்நாடக அரசு விரைவில் அணுக இருப்பதாகவும், கர்நாடக முதல்-மந்திரி டி.கே. சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

மேகதாது அணை கட்டுவதற்கு தமிழக மக்கள் மத்தியிலும், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இடையேயும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், அணையை கட்ட கர்நாடக அரசு துடிப்பது கண்டிக்கத்தக்கது.

மேகதாது அணையின் நீர்த்தேக்கப்பகுதி எதிர்பார்க்கப்பட்டதைவிட அதிகமாக இருக்கும் என்பதும் கர்நாடக முதல்-மந்திரியின் உரை மூலம் தெரியவந்துள்ளது.

நேபாளத்தில் இமய மலையில் உருவாகியிருந்த ஏரிகள் உடைந்ததால் ஏற்பட்ட வெள்ளத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். அதேபோல், இயற்கை சீற்றங்களால் எதிர்காலத்தில் மேகதாது அணைக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால், அதன்கீழ் பகுதியில் உள்ள தமிழக பகுதிகள் பேரழிவை சந்திக்கும் ஆபத்தும் உள்ளது.

மேகதாது அணை கட்டப்பட்டால், தமிழ்நாட்டிற்கு, குறிப்பாக காவிரி பாசன மாவட்டங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் நினைத்துப்பார்க்க முடியாதவை. மேகதாது அணையை கட்டுவதற்கான நடவடிக்கைகளை கர்நாடக அரசு நாளுக்கு நாள் தீவிரப்படுத்தி வரும் நிலையில், தமிழ்நாடு அமைதியாக இருப்பது நல்லதல்ல.

தமிழக அரசின் அலட்சியம் காவிரி நீரில் தமிழகத்தின் உரிமையை தாரைவார்ப்பதாக அமைந்துவிடும். எனவே, இந்த விஷயத்தில் தமிழக அரசு இனியும் அலட்சியம் காட்டக்கூடாது.

மேகதாது விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைகளை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். இது குறித்து விவாதிப்பதற்காக அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை தமிழக அரசு உடனடியாக கூட்ட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.