தமிழக செய்திகள்

சேலத்தில் அரசு பஸ் தாறுமாறாக ஓடி விபத்து - 7 பேர் பலி

பஸ் அந்த வழியாக வந்த இருசக்கர வாகனம் மீது மோதி சர்வீஸ் சாலையின் நடுவில் குறுக்காக நின்றது.

மாலை மலர்

சேலம்:

ஈரோடு பஸ் நிலையத்திலிருந்து சேலம் புதிய பஸ் நிலையத்திற்கு அரசு பஸ் ஒன்று இன்று காலை பயணிகளை ஏற்றிக் கொண்டு புறப்பட்டு வந்தது. இந்த பஸ் சேலம் மாவட்டம் சங்ககிரி பைபாஸ் சாலையில் வந்து கொண்டிருந்தது. இன்று பகல் 11 மணி அளவில் பஸ் சேலம் அருகே உள்ள உத்தமசோழபுரம் பகுதியில் உள்ள சூளைமேடு என்ற இடத்தில் வந்தபோது பஸ் திடீரென நிலை தடுமாறி சாலையின் நடுவில் உள்ள சென்டர் மீடியனில் ஏறி பக்கத்தில் உள்ள நெடுஞ்சாலையின் குறுக்கே புகுந்தது.

அப்போது சேலம் கொண்டலாம்பட்டி புதூர் அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த மேகநாதன் (23) என்பவர் வாடகைக்கு ஓட்டி வந்த மினி டெம்போ மீது மோதியது. தொடர்ந்து பஸ் அந்த வழியாக வந்த இருசக்கர வாகனம் மீது மோதி சர்வீஸ் சாலையின் நடுவில் குறுக்காக நின்றது.

விபத்துக்குள்ளான மினி டெம்போ வேனில் கொண்டாலம்பட்டி பகுதியை சேர்ந்த விக்னேஷ் என்பவர் குடும்பத்துடன் மகுடஞ்சாவடி கல்பாரப்பட்டியில் உள்ள குல தெய்வ கோவிலுக்கு சென்றனர். இதில் பெண்கள் உள்பட 11 பேர் இருந்தனர். அப்போது அரசு பஸ் டெம்போ வேன் மீது மோதிய விபத்தில் விக்னேஷின் தந்தை செல்வராஜ் (50), அமுதா, முருகன், 11 மாத குழந்தை ஜீவிதா, நித்திஸ்கா (5) என்ற குழந்தை ஆகிய 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள்.

மேலும் இரு சக்கர வாகனத்தில் அரசு பஸ் ஏறி இறங்கியதால் அதில் வந்த கொண்டலாம்பட்டி சந்தன காரன்காடு பகுதியை சேர்ந்த சண்முகம் என்பவரது மகன் மணிகண்டன் (வயது 22) மற்றும் அவரது தாய் இருசாயி (60) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள். அரசு பஸ் தறிகெட்டு ஓடி மோதிய விபத்தில் 7 பேர் உடல் நசுங்கி பலியானதால் அந்த பகுதியில் ஒரே பதற்றமாக காணப்பட்டது. அந்த வழியாக இருபுறமும் வந்த வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டது. இதனால் சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து தெரிய வந்ததும் கொண்டலாம்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

பின்னர் விபத்தில் இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அரசு மருத்துவமனையில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. மேலும் விபத்தில் காயமடைந்த 4 பேரை மீட்டு போலீசார் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த பயங்கர விபத்து காட்சிகள் அந்த பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க்கில் இருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி இருந்தது. அதில் ஈரோட்டில் இருந்து வந்த பஸ் தறிகெட்டு ஓடி அடுத்த சாலையில் நுழைந்து டெம்போ மீது மோதி இருசக்கர வாகனத்தில் ஏறி, இறங்கி செல்வதும், பின்னர் சர்வீஸ் சாலையில் பஸ் நிறுத்தப்பட்டதும் பதிவாகி இருந்தது. அரசு பஸ் சர்வீஸ் சாலையில் நிற்கவில்லை எனில் எதிரே உள்ள பெட்ரோல் பங்கில் புகுந்து மிகப்பெரிய விபத்து நேரிட்டிருக்கும். இந்த பதைபதைக்கும் வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.