தமிழக செய்திகள்

முக்தார், திருச்சி சூர்யா மீது பாய்ந்தது குண்டாஸ்!

யூடியூபில் பெண்கள் குறித்து அவதூறாகப் பேசியதாக இருவரும் கைது செய்யப்பட்டனர்.

பாஜக பெண் நிர்வாகி அலிஷா அப்துல்லா குறித்த அவதூறு மற்றும் ஆபாசப் பேச்சு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள யூடியூபர் முக்தார் அஹமது மற்றும் திருச்சி சூர்யா ஆகிய இருவர் மீதும் குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்துள்ளது.

பாஜக விளையாட்டு மேம்பாட்டுப் பிரிவு மாநிலச் செயலாளரான அலிஷா அப்துல்லா, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், சமூக வலைதளங்களில் தன்னைப்பற்றி யூடியூபர் முக்தார் மற்றும் திருச்சி சூர்யா ஆகியோர் மிகவும் இழிவாகவும், அவதூறாகவும் பேசியதாகக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த புகாரின் அடிப்படையில், இம்மாத தொடக்கத்தில் திருச்சி சூர்யாவை சென்னை மாநகர போலீஸார் கைது செய்தனர். இதைத்தொடர்ந்து தலைமறைவாக முக்தாரை தனிப்படை போலீஸார் கைது செய்து சிறையிலடைத்தனர்.

இந்நிலையில், தொடர்ந்து பெண்களை இழிவுபடுத்தும் விதமாகப் பேசி பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டதாக, இருவர் மீதும் குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.