சென்னையில் நாளை முதல் (ஏப்ரல் 3) மின்சார ரயில்கள் வழக்கம்போல் முழுமையாக இயங்கும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைமேடை 10 மற்றும் 11-ல் நடைபெற்ற மறுசீரமைப்பு மற்றும் தண்டவாளப் பணிகள் காரணமாக பிப்ரவரி மாதம் இரண்டாவது வாரத்தில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு, கூடுவாஞ்சேரி வரை செல்லும் மின்சார ரயில்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டிருந்தது.
மேலும் நடைமேடை 10 மற்றும் 11க்கு பதிலாக 5 மற்றும் 6வது நடைமேடைகளில் ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன. இதனால் ரயில் போக்குவரத்தை நம்பியிருக்கும் அலுவலக ஊழியர்கள், கல்லூரி மாணவர்கள் என பொதுமக்கள் அனைவரும் கடுமையாக சிரமத்திற்கு உள்ளாகினர்.
அரசு தரப்பில் இந்த வழித்தடங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டாலும் பயணநேரம் அதிகமாக இருந்ததால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.
இந்நிலையில் ஏப்.4ஆம் தேதி வழக்கம்போல் இயங்கும் என முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், பணிகள் திட்டமிட்ட காலத்திற்கு முன்னதாகவே முடிக்கப்பட்டதால் நாளை வழக்கம்போல் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் சென்னை கடற்கரை - தாம்பரம், கடற்கரை - செங்கல்பட்டு மற்றும் கடற்கரை - அரக்கோணம் ஆகிய வழித்தடங்களில் அனைத்து மின்சார ரயில்களும் தங்குதடையின்றி இயங்கும்.
பராமரிப்பு பணிகளுக்காக எழும்பூர் வரை வராமல் பகுதியளவு ரத்து செய்யப்பட்டிருந்த 44-க்கும் மேற்பட்ட ரயில் சேவைகள் இனி பழையபடி எழும்பூர் வழியாக இயங்கும்.
நாளை அதிகாலை முதல் 10 மற்றும் 11-வது நடைமேடைகளில் இருந்து ரயில்கள் வழக்கம் போல் இயக்கப்படும்.