தமிழக செய்திகள்

பிரபல பெண் யூடியூபர் வீட்டில் 120 பவுன் நகைகள் கொள்ளை - மர்மநபர்கள் கைவரிசை

நாகர்கோவிலில் பிரபல பெண் யூடியூபர் வீட்டில் பீரோ உடைக்கப்பட்டு, அதில் வைக்கப்பட்டிருந்த 120 பவுன் தங்கம், வைர நகைகள், 50 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருந்தன.

நாகர்கோவில் அருகே உள்ள தம்பத்துக்கோணம் வி.ஐ.பி. கார்டன் பகுதியை சேர்ந்தவர் வினோத்குமார் (வயது30). தொழிலதிபரான இவரது மனைவி மதுமிதா. இவர் பிரபல யூடியூபர் ஆவார்.

வினோத்குமார் தனது மனைவி மற்றும் குடும்பத்தினடன் நேற்று மதியம் நெல்லைக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு இரவு சுமார் 12 மணியளவில் மீண்டும் வீடு திரும்பினார். வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது, பொருட்கள் அனைத்தும் சிதறிக்கிடந்தன.

இதனைக்கண்டு வினோத்குமார் மற்றும் அவரது மனைவி அதிர்ச்சியடைந்தனர். வீட்டின் பின்புறம் சென்று பார்த்தபோது வீட்டின் பின்பக்கக் கதவு உடைக்கப்பட்டிருந்தது. மேலும் அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு, அதில் வைக்கப்பட்டிருந்த 120 பவுன் தங்கம் மற்றும் வைர நகைகள், 50 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருந்தன.

இதுகுறித்து வினோத் குமார் தம்பதியினர் உடனடியாக ராஜாக்கமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் ராஜாக்கமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் நாகர்கோவில் துணை போலீஸ் சூப்பிரண்டு இளஞ்செழியனும் விரைந்தார்.

வினோத்குமார் வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்டு யாரோ மர்மநபர்கள் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து வீட்டுக்குள் புகுந்து நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். ஆனால் கைவரிசை காட்டிய கொள்ளையர்கள் யார்? என்பது தெரியவில்லை.

சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வீட்டில் பதிவாகியிருந்த கைரேகைகள் மற்றும் தடயங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் கொள்ளையர்களை அடையாளம் காண சம்பவ இடத்திற்கு மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. அது சிறிது தூரம் ஓடிச்சென்றதே தவிர, யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

வினோத்குமார் வீட்டை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான சி.சி.டி.வி. கேமராக்கள் உள்ளன. கொள்ளையர்களை அடையாளம் காண அவற்றில் பதிவாகியிருக்கும் வீடியோ காட்சிகளை போலீசார் கைப்பற்றி துப்பு துலக்கி வருகின்றனர்.

கொள்ளையர்களை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்கள் கொள்ளையர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வினோத்குமார் தனது குடும்பத்துடன் மதியம் சென்று விட்டு இரவில் திரும்பிய நிலையில், அந்த இடைப்பட்ட நேரத்தில் அவரது வீட்டில் கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.

இதனால் அவர்கள் வீட்டை விட்டு சென்று திரும்பும் நேரம் தெரிந்த நபர்கள் யாரேனும் கைவரிசை காட்டினார்களா? என்ற சந்தேகமும் ஏற்பட்டிருக்கிறது. அந்த கோணத்திலும் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி கொள்ளையில் ஈடுபட்ட நபர்களை தேடி வருகின்றனர்.

கொள்ளையடிக்கப்பட்ட நகைகளின் மதிப்பு மட்டும் ரூ.1 கோடிக்கு மேல் வருகிறது. கணவர் தொழிலதிபராகவும், மனைவி பிரபல யூடியூபராகவும் இருக்கும் நிலையில் அவர்களது வீட்டில் கொள்ளை சம்பவம் நடந்திருப்பது நாகர்கோவில் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

SCROLL FOR NEXT