தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று காவல்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில் பதிலுரை அளித்த முதலமைச்சர் விஜய், முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கேலி செய்யும் வகையில் சைகை ஒன்றை செய்திருந்தார்.
அவரின் இந்த செயலுக்கு பலதரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழ, அது தன்னுடைய எதேச்சயான செயல் எனவும், உள்நோக்கம் கொண்டது இல்லை என்றும் விளக்கமளித்திருந்தார்.
இந்நிலையில் முதலமைச்சர் விஜய்யின் இந்த விளக்கம் தொடர்பாக திமுக சட்டத்துறை இணைச் செயலாளர் பரந்தாமன் சமூக வலைதளப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது;
“எல்லாவற்றையும் செய்துவிட்டு பின்பு வீட்டுக்குப்போய் ட்வீட் போடுவது இன்னும் நீங்கள் மாண்புமிகு ஆகவில்லை என்பதையேக் காட்டுகிறது.
முதல்முறையாக நீங்கள் செய்திருந்தால் உங்களின் இந்த விளக்கத்தை உண்மையென மக்கள் ஏற்றுக்கொள்வார்கள்.
ஆனால் தமிழ்நாட்டு சட்டமன்ற வரலாற்றில் யாரும் இதுவரை செய்திராத கீழ்த் தரமான செயலை நீங்கள் முதலமைச்சர் பொறுப்பை ஏற்றப்பிறகு இது இரண்டாவது முறையாக செய்திருக்கிறீர்கள்.
எனவே வேண்டும் என்றே திட்டமிட்டு உள்நோக்கத்துடன் தியாக வரலாற்றுக்கு சொந்தமான தலைவர்களின் தியாகத்தை கொச்சைப்படுத்திருக்கிறீர்கள்.
உழைப்பைத்தந்து, தியாகத்தை தந்து இந்த முதலமைச்சர் பொறுப்புக்கு பல காலம் மக்கள் பணியாற்றிய பின் வந்திருந்தால் இதன் வலிமையை உணர்ந்திருப்பீர்கள்.
ஊதாரித்தனமான வசனங்கள் பேசி, வலைதள பொய் பரப்புரை மூலம் பதவிக்கு வந்ததால் முதலமைச்சர் பொறுப்பின் மாண்பும், சட்டமன்ற மாண்பும் இன்று தங்களால் கூனிக்குறுகியுள்ளது. இதனால் தமிழ்நாட்டு மக்கள் தலைகுனிந்துள்ளனர்.
காவல்துறை மானியத்தின் பதிலுரையில் பதிலே இல்லாத பதிலுரையை அளித்த வரலாற்றைப் படைத்த முதலமைச்சர் தாங்கள்.
எதிர்காலத்தில் சட்டமன்ற நடவடிக்கைகளை அறிந்துக்கொள்ள குறிப்புகளை படிக்கயிருக்கும் அடுத்த தலைமுறையினருக்கு நீங்கள் பதில் அளிக்கத்தெரியாத பொம்மை முதலமைச்சர் என உங்களை நீங்களே பதிவிட்டுவிட்டீர்கள்.
எனவே பழிப்பதற்கும், திமுகவை குற்றம் சுமத்துவதற்கும் நேரத்தை வீணாக்காமல் மாண்புமிகு முதலமைச்சர் என்னும் உயரிய பொறுப்புணர்ந்து பணியாற்றுங்கள்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.