விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் வெள்ளிக்கிழமை தோறும் வார ஆட்டு சந்தை நடைபெறுவது வழக்கம். செஞ்சி பகுதியில் வளர்க்கப்படும் ஆடுகள் பெரும்பாலும் விவசாய நிலங்களிலும், மலை பகுதியிலும் மேய்ச்சலுக்கு உட்படுத்தி வளர்க்கப்படுவதால் செஞ்சி பகுதியில் உள்ள ஆடுகளை வாங்க தேனி, கம்பம், திண்டுக்கல் கிருஷ்ணகிரி, ஓசூர், ஆம்பூர், வேலூர், சென்னை பெங்களூர் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து வியாபாரிகள் ஆடுகளை போட்டி போட்டுக்கொண்டு வாங்கி செல்வது வழக்கம். இதனால் செஞ்சி வார சந்தை ஆடுகளுக்கு கிராக்கி அதிகம்.
இந்த நிலையில் நாளை மறுநாள் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி இன்று வழக்கம் போல செஞ்சி வாரச்சந்தை நடைபெற்றது. காலை முதலே சந்தைக்கு செஞ்சி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்கள் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
மேலும் ஆடுகளை வாங்குவதற்கும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான வியாபாரிகளும் வந்திருந்தனர். அவர்கள் போட்டி போட்டுக் கொண்டு ஆடுகளை வாங்கிச் சென்றனர். இன்று அதிகாலை முதல் நடைபெற்று வரும் செஞ்சி ஆட்டு சந்தையில் வெள்ளாடுகள், செம்மரி ஆடுகள் ரூ 15 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரையிலும் விலை போனது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று அதிகாலை துவங்கிய செஞ்சி வார ஆட்டு சந்தையில் ரூ 5 கோடிகள் வரை ஆடுகள் விற்பனை அமோகமாக நடைப்பெற்று உள்ளதாக வியாபாரி ஒருவர் தெரிவித்தார் செஞ்சி வார ஆட்டு சந்தையில் விலை அதிகமாக இருந்தாலும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நடைப்பெற்ற சந்தை என்பதால் ஆடுகள் விற்பனை ஜோராக நடைபெற்றது.