ஈரோடு:
ஈரோட்டில் இன்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் . அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
எதிர்மறை வாக்குகள் திமுக அரசுக்கு அதிகரித்து வருகிறது. எதிர்மறை வாக்குகள் எல்லாம் எங்களுக்கு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது. அதனை நாங்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்வோம். தேர்தல் களத்தில் முதல் அணியாக எங்கள் அணி நிற்கிறது.
தொடர்ந்து பல வருடங்களாக தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. கஞ்சா கலாச்சாரம் தலை தூக்கி இருக்கிறது அதனை முற்றிலும் முடித்து வைக்க முடியாத அரசாக முற்றுப்புள்ளி வைக்காத அரசாக திமுக செயல்பட்டு வருகிறது. மக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள். இந்த தேர்தலில் திமுகவிற்கு தக்க பாடத்தை புகட்டுவார்கள்.
வரலாற்றுச் சிறப்புமிக்க பெண்கள் அதிகாரத்திற்கான மசோதாவை பாஜக கொண்டுவந்துள்ளது. வரும் காலத்தில் பெண்களுக்கு உரிய இடத்தை அனைத்து துறையிலும் கிடைக்க வாய்ப்பு உள்ளது. தமிழகத்திற்கு எத்தனை சீட்டு வரும் என அதிகாரப்பூர்வமாக சொல்லி இருக்கிறார்கள்.
வாக்கு வங்கி அரசியலுக்காக காழ்ப்புணர்ச்சி அரசியலுக்காக கண்மூடித்தனமாக நாட்டின் வளர்ச்சியை எதிர்ப்பது யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றார்.