தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் ஈரோட்டில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நார்வேயில் வெற்றி பெற்ற பிரக்யானந்தாவுக்கு வாழ்த்துகள்
புதிதாக இயக்கம் தொடங்கியுள்ள அண்ணாமலைக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
சட்ட ஒழுங்கு பிரச்சனை தமிழகத்தில் கடந்த ஆட்சியில் இருந்தது. புதிய ஆட்சியிலும் அது தொடர்கிறது. இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் கொலை, கொள்ளை குற்ற சம்பவங்கள் நடக்கின்றன. குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தொடர்ந்து, ஆட்சியாளர்கள் பதவியேற்றவுடன் ஒரு மாதத்திற்குள் பல பகுதிகளில் கொலை, கொள்ளை, திருட்டு, பாலியல் சம்பவங்கள் நடக்கிறது. இதற்கு முடிவு கட்டும் முடிவு எடுக்கவேண்டும். தவறு செய்பவர்கள் அச்சப்படும் வகையில் தண்டனை இருக்கவேண்டும். பாலியல் குற்றத்திற்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என்பது தான் த.மா.கா. நிலைப்பாடு.
ஆட்சி வந்ததும் விவசாயிகளின் நம்பிக்கையை பெற்றிருந்த நிலையில் தற்போது இழந்துள்ளனர். விவசாயிகளுக்கு முழுமையான கடன் தள்ளுபடி செய்யவில்லை என்பதால் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். விவசாயம் சார்ந்த அரசாக இருக்க வேண்டும்.
மேகதாது அணை கட்ட கர்நாடக பிடிவாதம் பிடிக்கிறது. த.வெ.க. கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கர்நாடகாவில் கடுமையாக பேசுவது கண்டிக்கத்தக்கது. தமிழக முதல்வர் கர்நாடகா முதல்வரை தட்டிக்கேட்க வேண்டும். காங்கிரஸ் அகில இந்திய தலைவர்களை சந்தித்து முதன்மையான பிரச்சனையாக பேசவேண்டும்.
மின்வாரிய அலுவலகத்தில் ஹார்ட் டிஸ்க் காணாமல் போன விவகாரத்தில் சந்தேகம் வலுக்கிறது. இதில் அரசு உண்மை நிலையை விளக்கவேண்டும். கே.என்.நேரு மீது எப்ஐஆர் பதிவு செய்தது குறித்த கேள்விக்கு "சட்டம் தன் கடமையை செய்யவேண்டும் என்ற மாற்றுக்கருத்து இல்லை" என பதிலளித்துள்ளார்.
வாக்காளர்களை சாதாரணமாக எடை போடக்கூடாது. வாக்காளர்கள் தேர்தலில் கூட்டணி கட்சியாக இருந்தது தேர்தலுக்கு பிறகு நட்பு கட்சியாக தொடர்கிறது. தமாகா கட்சியை பலப்படுத்த கூட்டம் நடத்தப்படும். வருகிற 14-ஆம் தேதி சென்னையில் தமிழ் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் கூட்டம் நடத்தப்படுகிறது. இதில் கட்சியை வலுப்படுத்துவது குறித்து கலந்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும். தமாகா எம்எல்ஏ வரவில்லை என்ற ஏக்கம் உள்ளது.
தேர்தலுக்கு பிறகு கூட்டணி கட்சிகள் பிரிந்து போவதில்லை. தேர்தலில் கூட்டணிகள் நட்பு கட்சிகளாக தொடர்கிறது. இந்த தேர்தலில் பெரிய அதிசயம் நடந்துள்ளது. வாக்காளர்கள் ஆட்சியாளர்களின் செயல்பாடுகளை கூர்ந்து கவனித்து வருகிறார்கள். வாக்காளர்கள் எண்ணங்களை நம்பிக்கையை இந்த அரசு பெற வேண்டும். இதேபோல் இந்த அரசின் செயல்பாடுகளையும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி கூர்ந்து கவனித்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார் .
பேட்டியின் போது மாநில பொதுச்செயலாளர் யுவராஜா, மாநில துணைத்தலைவர் விடியல் சேகர், மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.டி.சந்திரசேகர், மாவட்டத் தலைவர் விஜயகுமார் உள்பட பலர் உடன் இருந்தனர்.