சிறுமி மாயமானது தொடர்பாக சந்தேகத்தின் பேரில் வெளிமாவட்டத்தை சேர்ந்த 3 பேர் உள்பட 4 பேரை பிடித்து தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த ஆலம்பூண்டி நடுப்பட்டு சாலையைச் சேர்ந்தவர் வடிவேலு, இவரது 7 வயது மகள். அங்குள்ள அரசு ஆரம்பப் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறாள்.
சிறுமி கடந்த 11-ந் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடி விட்டு இரவு வீட்டில் பெற்றோருடன் தூங்கினார். மறுநாள் அதிகாலை 5 மணியளவில் பெற்றோர் எழுந்து பார்த்தபோது அருகே தூங்கி கொண்டிருந்த சிறுமியை காணவில்லை. இதனால் பதறிப்போன பெற்றோர் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதனை தொடர்ந்து சிறுமியின் தந்தை வடிவேலு போலீசில் புகார் அளித்தார். விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. அருளரசு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மதிவாணன் உத்தரவின் பேரில் சிறுமியை கண்டுபிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி சிறுமியை தேடி வருகின்றனர். சிறுமியின் பெற்றோர் மற்றும் அக்கம்பக்கத்தில் உள்ள வீடுகளில் இருப்பவர்களிடமும் விசாரணை நடத்தினர். இதற்கிைடயே மாயமான சிறுமியை கண்டுபிடிக்க 3 டி.எஸ்.பி.க்கள் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.
இதுதவிர தீயணைப்பு துறையினர் மூலமாக சிறுமியின் வீட்டை சுற்றியுள்ள விளைநிலங்கள், புதர்கள், ஏரி, குளங்கள், மலைக்குன்றுகளில் உள்ள குகைகள், பாறைகளின் இடுக்குகளில் சிறுமி இருக்கிறாளா? என்பது குறித்து டிரோன் மூலமாகவும் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் உள்ள அனைத்து கண்காணிப்பு கேமராக்களையும் ஆய்வு செய்து சிறுமி மாயமான நாளில் சந்தேகத்திற்கிடமாக யாராவது அங்கு சுற்றி திரிந்துள்ளனரா? என்பதையும் பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் சிறுமி மாயமானது தொடர்பாக சந்தேகத்தின் பேரில் வெளிமாவட்டத்தை சேர்ந்த 3 பேர் உள்பட 4 பேரை பிடித்து தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.